210
அப்பாத்துரையம் - 2
புலவர்களையும் காண்கிறோம். எல்லா நகரங்களின் புலவர் களையும், எல்லாப் படியிலுள்ள சமுதாய, தொழில் வகுப்புகளைச் சார்ந்த புலவர்களையும் காண்கிறோம்.பெண்பாற் புலவர்களிலும் இதுபோல முழு நிறை பிரதிநிதித்துவம் உடைய முப்பத்தொரு புலவரை- முதற்புலவர்களான ஒளவையார், காக்கை பாடினியார் உள்ளிட்ட புலவரைக் காண்கிறோம்.
சங்க காலக் கல்வி நிலைமையைக் குத்தாயமாக மதிப்பிட்டால், அஃது இன்றைய 15 விழுக்காடல்ல, கம்பர் கால 45 விழுக்காடல்ல, 65 விழுக்காட்டுக்குக் குறையாமல் இருக்கு மென்னலாம்.
இது தற்செயலாக நேர்ந்த முன்னேற்றமன்று, முத்தமிழ் வேந்தரும், சங்கமும் குடியாட்சி மரபுகளும் இணைந்து செய்த செயல்களாகும்.
இதே முன்னேற்றத்தை - இன்றைய தமிழகம் மட்டுமன்றி, மேனாடுகள் கூடக் காணாத முன்னேற்றத்தை- கலை இயல்கள், செல்வ நிலை, வாணிகம், உழவு, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றிலும் காணலாம்.
சங்க இலக்கியமும் சிலப்பதிகார மணிமேகலைகளும் பெருங்கதையும் இப்பண்பாடுகளை நமக்குக் கண்ணாடி போல் விளக்கிக் காட்டுகின்றன.
திருவள்ளுவர் காலத் தமிழ், தமிழின, தமிழகப் பண்பாடு அக்காலப் பண்பாடுதான்- ஆனால், அஃது இன்றைய தமிழகப் பண்பாட்டுக்கோ, இன்றைய மேனாட்டுப் பண்பாட்டுக்கோ குறைந்த ஒன்றன்று-பலவகையில் அவற்றை விஞ்சியதே யாகும். ‘ஆராய்ச்சியாளர்' இவற்றை எடுத்துக் கூறாமலில்லை. கூறுபவர், கேட்பவர் சூழலால் அஃது ஒப்பீட்டு முறையில் அளவிடப் படாமல் போகிறது என்னலாம்.
பழைமை எல்லை
திருவள்ளுவர் காலச் சூழலை மட்டுமன்றி, அதன் பழைமை எல்லையையும் சுட்டிக் காட்டும் இன்னொரு வாழ்வுக் கூறு சமயநிலை ஆகும்.