தென்மொழி
223
“திருவள்ளுவர் ஒழுக்க விதிகளுட் சில பல அவர்க்கேயுரிய தனிப்பட்டகருத்துகளாயிருக்கக் கூடுமானாலும்,பெரும்பான்மை அந்நாட்டுப் பொது மக்களின் மரபுச் செல்வத்திலிருந்து எடுத்து அவரால் கவிதைப்படுத்தப் பட்டவையே என்னலாம்.
"மனுநீதி குறளுக்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தென்று கூறப்படுகிறது. ஆயினும், இரண்டுக்கும் இடையே உள்ள வேற்றுமைதான் எவ்வளவு? மனுநூலைப் பார்ப்பன உள்ளம் ஆட்டிப்படைத்துள்ளது. உலகம் மாயை வாழ்வு மாயை என்ற உலக மறுப்புக் கோட்பாடே அதில் மேலோங்கியுள்ளது. திருவள்ளுவரின் உலகமெய்ம்மை,வாழ்க்கை ஆக்கக் கோட்பாடுகள் இங்கே இடம் பெற்றுள்ளனவானாலும், இவை இரண்டா மிடத்தில் பின் தள்ளப்பட்டுத் தட்டிக்கொடுக்கப்படுகின்றன.
"செயல்துறை வாழ்வுக்குப் பகவத்கீதை செயற்கை இரும்புச் சட்டம் வகுத்து உணர்ச்சியற்ற முறையில் அதை உலகச் சட்டம் என்னும் விதியுடன் இணைக்கிறது. குறள், செயல்துறை வாழ்வு முற்றிலும் அன்புக்குரிய வாழ்வு எனக் குறிக்கிறது. எவ்வளவு பெரிய ஒழுக்கமுறை முன்னேற்றம் இது? உழைப்பும் ஊதியமும் அன்புச் செயலுக்குரிய கருவிகள் மட்டுமே என்று வகுக்கிறது அது.
“உழைப்பில் இன்பம்-இந்தியர் திருவாயிலிருந்து நாம் எதிர்பாராத கருத்து. வள்ளுவர் வாய்மொழியில் தரப்படுகிறது. குறளின் உலக மெய்ம்மை, வாழ்க்கை ஆக்கக் கோட்பாட்டின் மெய் வலிமையை இது காட்டுகிறது.
“புத்தரையும் பகவத்கீதை ஆசிரியரையும் போலவே குறள் உலகின் சிக்கல்களிலிருந்து அக விடுதலையும், அதில் வெறுப்பும் களிப்புமற்ற உள்ளமும் நாடுகிறது. இருவரையும் போலவே அது கொல்லாமையையும் அழிவு செய்யாமையையும் குறிக்கொள்கிறது. ஆனால், புத்தர்க்கு மாறாக, தான் கொல்லாத உயிரின் ஊனை உண்பதும் தவறு என்று குறள் துணிகிறது. இங்ஙனம் உலக மாயைக் கோட்பாட்டாளர்கள் கூறிய நற்பண்புகளை ஒன்று விடாமல் குறள் மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்த அகமுக ஆன்மிக ஒழுக்கத்துடன் அது அன்புப் பாசத்தை இணைத் துள்ளது.