தமிழன் உரிமை
||253
டி.கே.சண்முகம் அந்த ஆலப் புழையில் பிறந்தவர்! அவர் குடும்பம் ஏழு தலைமுறையாக ஆலப் புழையிலேயே வாழ்ந்தது! தமிழன் பிறப்புரிமை, இந்தியத் தேசியத்தில் படும் பாடு இது.
இந்தியாவின் தேசியம் பவனிவரும் மாநிலத்திலே, தமிழரே நிறைந்த ஒரு பகுதியில் ஒரு தமிழன் தமிழர் காணத் தமிழ்நாடகம் நடிக்க உரிமையில்லை. ஆனால், தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் தமிழனல்லாதவன், தமிழ் தெரியாதவன் எந்தப் பதவியும் வகிக்க முடியும். தமிழர் மொழியுரிமைச் சீட்டுகள் பெற்றுக்கூடத் தமிழர் உறுப்பினராக முடியும்! தமிழ் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், ‘தமிழன் அல்லன்' என்ற உரிமையாலேயே எவரும் தமிழ்ப் பள்ளி கல்லூரித் தலைவராகலாம், தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராகலாம், பணிமனை முதல்வர்கள் ஆய்விடலாம். தமிழக ஆட்சி தமிழர்க்காக அன்று. தமிழர் அல்லாதவர்க்காக. தமிழர் தவிர உலகில் மற்ற எல்லா இனத்தவர்க்குமாக நடக்கும் ஆட்சி என்பதை இது காட்டுகிறது!
அயற் பண்பாட்சியில் தமிழன் அடைந்துள்ள தன்மான மற்ற நிலை இது!
இந்நிலையை அகற்ற, தமிழர் தன்மானம் மேலோங்க, உலகத்தில் மனிதரிடையே மனிதனாகத் தமிழன் வாழ, உலக மொழிகளிடையே, மொழிகளுள் மொழியாகத் தமிழும் தனக்குரிய இடம்பெற, உன் கைச்சீட்டை உன் இன உறுப்பினனுக்கே, தமிழ்மொழிப் பற்றும் தமிழ்ப்பண்பும் தமிழார்வமும் உள்ள கட்சிக்கே அளி, தமிழா! தெரிந்தோ தெரியாமலோ இடைக்கால அடிமை வாழ்வில் தமிழர் செய்துவந்த தமிழ்ப் பகைமையின் தடத்தை - உரிமையுடன் உன் உரிமைச் சீட்டை வழுங்குவதனாலே ஒழித்துத் தமிழர் தன்னாட்சியில் காலெடுத்து வை, தமிழா!
'தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’
-
என்று பாடிய தேசியக் கவிஞர் வாக்கு வீண் வாக்காகாமல் காக்க முனைந்தெழு, பீறி எழு, வீறி எழு!