பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




262

அப்பாத்துரையம் - 2

கருவறுக்கும் திட்டமாகவே வாழா மொழியின் எழுத்துகளின் புகுத்தீடு மெல்லத் தலை காட்டுகிறது.

இப் புகுத்தீட்டுக்கு வடமொழிப் பற்றாளர் கூறும் நியாயங்களை அலசிப் பார்த்து, அவற்றின் நேர்மை - நேர்மைக் கேடுகளை ஆராய வேண்டுவது இன்றி யமையாதது ஆகும்.

தமிழ் வாழும் மொழி. வாழும் மொழிகளின் பல தலைமுறைகளைக் கண்டும் இன்னும் உயிர்ப்பாற்றலும் இளமை நலமும் தளராத மொழி. அது எல்லா உலக மொழிகளுக்கும் முற்பட்டதாய்,பல மொழிகளையும், நாகரிகங்களையும், நாகரிகத் தலைமுறைகளையும் தோற்றுவித்து, அம்மொழிகளின் வாழ்வு களை யெல்லாம், அம்மொழி தலைமுறைகளின் வாழ்வுகளை யெல்லாம் கடந்து நின்று நிலவுகின்றது. அதற்கொப்பாகப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்த கலை, இலக்கிய, இலக்கண, நாகரிகப் பெருவாழ்வுடைய மொழி உலகில் வேறு எதுவும் இல்லை. இந்த இறவா வாழ்வு, தளரா இளமை, மொழித் தாய்மை ஆகியவை கருதியே தமிழைக் கன்னித் தாய்மொழி என்றும், ஓவா மூவா முதன்மொழி என்றும் பாராட்டுவர் அறிஞர். அதுவே முக்காலத்துக்கும் உரிய மொழி என்றுகூடக் கூறலாம். ஏனெனில், அஃது இறந்த காலத்தின் கருவிலிருந்து நிகழ்காலத்துக்கு ஒரு பாலமாய், நிகழ்காலங் கடந்து வருங்கால உலகு நோக்கித் தளராது முன்னேறும் மனித இனத்தின் உயர் நாகரிகப் பெரும் பாதையாக அமைந்துள்ளது. இச்சிறப்பு வட மொழிக்கோ வேறு எந்த உலக மொழிக்கோ உரியதாகாது.

தமிழ் வாழும் மொழி மட்டுமல்ல, வாழ்வளிக்கும் மொழி. அது தன் இனமொழிகளுக்கும் தன்னுடன் தொடர்புடைய மொழியினங்களுக்கும் பழம் பெருமை, கலை நாகரிக வளம், நீடித்த வாழ்வு ஆகியவற்றை அளித்துள்ளது. அதன் பழைய இனத் தொடர்பு, வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றின் காரண மாகவே, உலகில் வட ஆரிய மொழிகளாகிய இலத்தீனம், கிரேக்கம், வடமொழி ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முற்பட்ட பொலிவுடையனவாய்த் திகழ்ந்தன. அதே தொடர்பு காரணமாகவே, வட இந்தியத் தாய்மொழிகளின் புத்தணிமைக் காலச் சிறுவாழ்வு கடந்து, தென்னக மொழிகள் ஆயிரக்கணக் கான ஆண்டு பழைமையும் நீடித்த இலக்கிய வாழ்வும் பெற்றுள்ளன.