தமிழன் உரிமை
285
புகுத்தீடு செய்யப்படும் நான்கு எழுத்துகளும், வடமொழி எழுத்துகள். ஆனால், புகுத்தீடு செய்யப்படும் வடிவம் வடவர் வடமொழி எழுத்துவடிவமான தேவநாகரி வடிவமன்று. தமிழரிடையே வடமொழி பயின்றவர் முன்னால் பயன்படுத்திய, அவர்களுக்குப் பழக்கமான கிரந்த வடிவங்களே. இந்த வடிவங்களே கிட்டத்தட்ட இன்றும் மலையாள மொழியில் இவ்வெழுத்துகளுக்கு வழங்குகின்றன. அதுமட்டுமன்று. தமிழும் வடமொழியும் கலந்து 13ஆம் நூற்றாண்டிலிருந்த ‘மணிப்பிரவாள நடை' எழுதித் தோல்வியுற்ற வைணவ உரைகாரர் பயன்படுத்திய எழுத்தும் இதுவே.
தமிழர் வடமொழி படிக்க இந்தக் கிரந்த எழுத்துப் பயன்படவில்லை. வடமொழியில் தமிழர் தொடர்புடைய எழுத்து வடிவுகூட இருக்கக்கூடாது என்று வடமொழிப் பற்றாளர் நினைக்கின்றனர்.ஆனால், தமிழர் மீது வடமொழியைப் படிப்படியாகப் புகுத்துவதில் மட்டும், அழிந்துவரும் அந்த எழுத்துகளைக் கையாளுகின்றனர். இதில் அவர்கள் போக்கு வெளிப்படை தமிழிலிருந்து தமிழர் முன்பு வழங்கிய வடமொழிக் கிரந்த எழுத்து, அதிலிருந்து தேவநாகரி எழுத்து!
தமிழ் எழுத்து முழுவதுமே தேவநாகரி ஆதல்வேண்டும் என்ற வட நாட்டவர் இயக்கம் ஒன்று உண்டு என்பதும், இங்கே தமிழரால் நினைவு கூரத்தக்கது. இந்தியப் பத்திரிகைகள் அதை ஆதரித்து அரும்பாடுபடுகின்றன.
வடவரும், அவர்களுக்குப் பக்கப்பாட்டுப் பாடும் வடமொழிப் பற்றாளரும், இருசாரார் கைப்பொம்மையாய் இருக்கும் 'அடிமைத் தமிழகம்' அல்லது சன்னை'யின் அரசியலாரும் சேர்ந்து செய்யும் இம்மொழிக் கொலை நாடகத்துக்குத் தமிழினம் தன் இனக்குரலெழுப்பி எதிர்ப்பளித்து, எழுநூறு ஆண்டுகட்குமுன் நம் முன்னோர் மணிப்பிரவாளத் தமிழை ஒழித்ததுபோல அம்முயற்சியைப் புறம் காண்பார்களாக!