பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 2

304 போது, அது ‘தமிழ்நாடு' என்ற குறிக்கோளைப் பேரளவில் நழுவவிட்டு, 'திராவிடநாடு' என்ற குறிக்கோளை மட்டுமே வலியுறுத்திற்று. ஆனால், 1949இல் திராவிட முன்னேற்றக் கழகமாக மறுமலர்ச்சியுற்றபோது, அது தமிழகத்தின் மறுமலர்ச்சி இயக்கமாகி, முழுநிறை தமிழ்த் தேசிய வாழ்வாயிற்று. 'தமிழ்நாடு' என்ற குறிக்கோளுடன், திராவிடநாடு என்ற குறிக்கோளை இணைத்து, 'முழுநிறை உரிமை பெற்ற தமிழ்நாடும்' முழுநிறை உரிமைபெற்ற கேரளம், ஆந்திரம், கருநாடகம், துளுவம் ஆகிய நாடுகளுடன் இணைந்து, சரிசம அடிப்படையில் அமைந்த திராவிடக் கூட்டாட்சியும்' என்று இணைவுக் குறிக்கோளுக்கு விளக்க வரையறை அளிக்கப்பட்டது.

இந்த இணைவுக் குறிக்கோளும் அதன் விளக்க வரையறையும் அகில இந்திய, அகில உலகக் கட்சிகளால் மனக்குழப்பமுறும் கட்சிப் புத்தார்வலர்க்காகவே செய்யப் பட்டாலும், அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணியிலே ஒரு பெருமாறுதல் உண்டுபண்ணிற்று. 'தமிழ்நாடு' குறிக்கோளை மட்டுமே கண்டுணர முடிந்த அகில இந்திய, அகில உலகக் கட்சிகளுடன் அக்குறிக்கோள் நோக்கி ஒத்துழைத்தும், ‘திராவிடநாடு’ குறிக்கோள் மட்டுமே கொண்ட திராவிடர் கழகத்துடனும் அது தேவைப்பட்ட சமயம் அவ்வப்போது அக்குறிக்கோள் நோக்கி ஒத்துழைத்தும், தமிழக முழுநிறை தேசியத்தின் மய்யக் கட்சியாய்ச் செயலாற்ற முடிகின்றது. அதன் ஆற்றல் இதனால் பன்மடங்கு பெருகிற்று. தமிழகம் கடந்து மிகுதி பரவாத நிலையிலேயே 1952-க்குள்ளாக அஃது அகில இந்தியாவிலும் ஒப்புயர்வற்ற ஆற்றல் மிக்க ஒரு கட்சியாயிற்று. 1952 தேர்தலில் அது தன் நேரடி ஆதரவாளர்களாகத் தமிழகத்தில் 40 உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்ப முடிந்தது. அத்துடன் அதற்கு முன் தமிழகத்தில் 2 இடம் மட்டுமே பெற்ற கம்யூனிஸ்டுகளை அது தன் அனுதாப ஆற்றல் மூலமே 20 இடம் பெறுவித்தும், தமிழகத்துக்கு வெளியே முற்போக்குக் கட்சிகள் அதாவது இடதுசாரிக் கட்சிகள் பெருவாரியாக வெற்றிபெறுவித்தும் கீழ்த்திசை முழுவதுமே முற்போக்குச் சத்திகளுக்குத் தூண்டுதல் தந்து இயக்கிற்று.1952-க்குப் பின் அதன் ஆற்றல் தமிழகத்தினுள்ளும் வெளியேயும் கண்காணும்