பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




312

அப்பாத்துரையம் - 2

உண்மையில், பிற நாட்டார் தலையீட்டால் தென்னாட்டின் மொழிதான் ஐந்தாகப் பிரிவுற்றது. பண்பாட்டிலும் பலவகைச் சீரழிவுகள் ஏற்பட்டன. ஆனாலும், புதிய ஒற்றுமைக்குரிய பண்பாட்டுக் கூறுகளை அந்தத் தலையீடே உண்டுபண்ணிற்று. திராவிட இனத்தின் பண்டை நாடகக் கலையின் பெருமையில் ஒரு பகுதியை மட்டுமே நாம் மலையாளத்தில் காண்கிறோம். அதன் பிற கூறுகள் தமிழிலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் உள்ளன. அதுபோலவே கட்டடக் கலையின் ஒரு பெரும் பகுதி தமிழகத்திலும் மீந்தவை மலையாளம், கன்னடம் ஆந்திரப் பகுதியிலும் உள்ளன. ஓவியத்தில் பெரும் பகுதி ஆந்திரா விலும் தமிழகத்திலும் சிதறிக் கிடக்கின்றன. இவ்வெல்லைகள் முழுதும் மீண்டும் ஒன்றுபட்டாலன்றி, தமிழின நாகரிகத்தின் முழு விரிவை நாம் காணமுடியாது.

மொழித் துறையிலும் தமிழ்மொழியின் முழு ஆராய்ச்சி என்றாலும், பிற தென்மொழிகளின் முழு ஆராய்ச்சி என்றாலும் ஒன்றே - எல்லாம் எல்லாம் ஒரே திராவிட மொழி ஆராய்ச்சியே ! அயலினப் பண்பாட்சியிலுள்ள சென்னைப் பல்கலைக் கழகமும் அண்ணாமலை பல்கலைக் கழகமும் இத்துறையைத் தீண்டவில்லை, தீண்டிய பின்னும் வேண்டா வெறுப்பாக நத்தை வேகமும், நத்தையார்வமுமே காட்டிவருகின்றன. தேசியத் தமிழகத்திலே திராவிடக் கூட்டுறவிலே ஐந்து மொழிகளின் தனித்தனிச் சிறப்பாராய்ச்சிகளை ஐந்து நாட்டுப் பல்கலைக் கழகங்களும், அவற்றின் கொண்டுகூட்டான திராவிடமொழியின் உயர் ஆராய்ச்சியை, அனைத்தும் சேர்ந்த கூட்டுக் குழுவும் நடத்தும்.

தமிழினப் பழைமை யாராய்ச்சியில் பாண்டியர், சோழர் தலைநகரங்கள் தமிழகத்திலுள்ளன. ஆனால், இவ்விருவர் ஆட்சிச் சின்னங்களும் கல்வெட்டுகளும் சேரர் தலைநகரான வஞ்சியிலும் திருவாங்கூரிலும் மலபாரிலும் உள்ளன. மிகப் பழங்காலச் சேரர் தலைநகரான 'நறா' நகர் தென்கன்னட மாவட்டத்திலேயே இருக்கிறது. தமிழரசருள் பாண்டியர் ஆண்ட சின்னங்களுடனும் கல்வெட்டுகளுடனும்; சோழர் ஆண்ட சின்னங்களுடனும் கல்வெட்டுகளுடனுமே குடகு நாட்டு வரலாறு தொடங்குகிறது.