பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

315

தட்டுக்கெடும். பொருள்கள் கிடைக்கா. விலை எட்டா விலையாகும். பணமுடை, பொருள்முடை, உணவுமுடை உண்டாகும். ஆட்சிமீது மக்கள் கொதித்தெழுவர். புதிய நல்லாட்சி ஏற்படுத்த முந்துவர். அரசியல் மிகத் திறம்பட நடத்தப்பட்ட போதும் இதேபோன்று மாறுதல்கள் மக்கள் கண்களில் படாமல் இராது. பணம் பெருகும்; பொருள்கள் மலிவாகும்; கல்வி பெருகும். வாழ்வின் இன்பத்தால் கலைகள் பொங்கும்; அறிவு மலர்ச்சியுறும்.

குடியுரிமை என்பது மக்கள் நல்வாழ்வு என்பதை இது நமக்கு விளக்கிக் காட்டுகிறது. தனி மனிதர் நல்வாழ்வுக்குரிய விலையாகவே மக்கள் வரி கொடுக் கின்றனர்; சட்டத்துக்கும் கட்டுப்படுகின்றனர். ஆட்சி, நல்வாழ்வும் வாழ்வில் வளமும் உண்டுபண்ணினால், கடமை செய்தவர் மகிழ்வர். இன்னும் சிறிது மிகுதி வரி கொடுக்கவேண்டி வந்தால், அச்சமயம் அவர்கள் முணுமுணுக்க மாட்டார்கள். இன்னும் சட்டம்மூலம் சில கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டுமானால், அதையும் வெறுக்கமாட்டார்கள். உண்மையில் இக்கடமைகளை அவர்கள் தாமாகப் பெருக்க முந்துவார்கள். பங்கீட்டுக் களத்தில் மிகுதி ஆதாய வீதம் தரும் நிலையத்தில் எவர்தாம் மிகுதி பங்குபோட விரும்பமாட்டார்கள்! ஆட்சி என்பது உண்மையில் நல்வாழ்வு, வாழ்வுவளம் என்ற ஆதாயத்துக்காக அமைக்கப்பட்ட ஒரு பங்கீட்டு நிலையமே ஆகும்.

ஆனால், நல்வாழ்வும் வாழ்வின் வளமும் ஆட்சி மூலம் கிடைக்காவிட்டால், அல்வாழ்வும் அல்லலும் பெருகினால், ஆதாயத்துக்குப் பதில், இழப்பே தரும் நிலையத்திலிருந்த தம் பங்கை மீட்டுப் பெற்று, வேறு நிலையத்திலிட விரும்பும் பங்குதாரர்களைப் போல, மக்கள் அந்த ஆட்சியை மாற்றியோ, உடைத்தெறிந்தோ வேறு ஆட்சியை அமைக்க விரும்பாதிருக்க

மாட்டார்கள்.

குடியுரிமை என்பது நல்வாழ்வும் வாழ்வின் வளமும் மட்டுமல்ல. ஆட்சியையும் ஆட்சிக்குட்பட்ட திட்டங்களையும் வேண்டும்போது ஆக்கும் ஆற்றலும் வேண்டாதபோது அழிக்கும் ஆற்றலும் குடியுரிமையின் ஒரு பகுதி ஆகும் என்பதை இது காட்டுகிறது.