பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




316

அப்பாத்துரையம் - 2

குடியாட்சிஎன்பது நல்லாட்சிக்குரிய இன்னொரு பெயரன்று. நல்லாட்சியை அமைக்கும் உரிமையும், அல்லாட்சியை அழிக்கும் உரிமையும் மக்களிடமே இருத்தல் வேண்டும் என்பதே குடியாட்சியின் அடிப்படைக் கருத்துமாகும்.

'பொன்னாட்சியானாலும் தன்னாட்சிக்கு நிகரன்று' என்ற பழமொழி தமிழில் இது காரணமாகவே எழுந்தது.

அயலாட்சி தன்னாட்சியன்று. அது குடியாட்சியும் ஆகாது. ஏனென்றால், அஃது எவ்வளவு பொன்னாட்சியாய் இருந்தாலும் ஆளுபவர் ஆளப்படுகிற வர்களுள் ஒருவர் அல்லர். அவர்களால் ஒரு போர் இல்லாமல் நீக்கப்படத்தக்க வரும் அல்லர்.

அதே சமயம் தம் நாட்டவரே ஆள்பவர் ஆனாலும், அவ்வாட்சி தன்னாட்சியோ குடியாட்சியோ ஆகிவிடாது. ஏனெனில், மக்கள் விரும்பினால் ஆக்கவும், விரும்பாவிட்டால் அழித்து மாற்றவும் உரிமையுடைய ஆட்சியே குடியாட்சி ஆகும்.

6

நான் ஆளப் பிறந்தவன், அதனால் ஆள்கிறேன்' என்று இறுமாப்போடு அரசர்கள் கூறிக்கொண்ட காலம் ஒன்று உண்டு. அங்ஙனம் அரசர்கள் மரபில் இங்கிலாந்திலே மன்னன் முதலாம் சார்லஸ் என்பவன் மக்களால் தூக்கிலிடப்பட்டான்.பிரான்சிலே மன்னன் லூயி மக்கள் முன்னிலையிலேயே சிரச்சேதம் செய்யப்பட்டான். உருசியாவிலே, பாரதியார் கூறுவது போன்று 'ஜார் அரசன் கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்”!

என் ஆற்றலால் ஆள்கிறேன் என்று கூறிய ஜூலியஸ் சீஸர், நெப்போலியன், ஹிட்லர் ஆகியோர் அதே ஆற்றலாலேயே வீழ்த்தப்பட்டனர்.

இன்றைய நாகரிக உலகில் எல்லா நாகரிக அரசாங்கங்களும் தம்மைக் குடியாட்சி அரசாங்கங்கள் என்று கூறிக்கொள்ளத் தான் விரும்புகின்றன. அயல் நாட்டு ஆதிக்க ஆட்சிகூடத் தன் ஆட்சிக்குக் குடியாட்சிச் சாயமிட்டு, குடி யாட்சிப் போர்வை போர்த்துக்கொள்ளவே விரும்புகின்றது. பிரிட்டன் ஆட்சியில் இந்தியாவில் இந்தியாவுக்கெனப் பாராளுமன்றங்கள், சட்ட மன்றங்கள், மாகாண உரிமையாட்சிகள், மந்திரிசபைகள் முதலிய வற்றைப் பிரிட்டன் அமைக்க முனைந்தது இதனாலேயாகும்.