பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

317

தொடக்கத்தில், பிரிட்டிஷார், 'எங்கள் ஆட்சி நல்லாட்சி. தந்தி, தபால், பாதை, இருப்புப்பாதை, அணைக்கட்டு கால்வாய் வகுத்து உங்களுக்கு நல்வாழ்வின் வரம் கொடுத்த ஆட்சி’ என்றுதான் தம் ஆட்சியைப் பற்றிப் பள்ளிப் புத்தகங்களில் பிரச்சாரம் செய்தனர். ஆனால் பின்னாள்களில் ‘சட்ட உரிமைகள் தந்தோம், பதவி உரிமைகள் தந்தோம், உங்களவரே உங்களை ஆளும்படி செய்தோம்,' என்று பாணியை மாற்றினர். ஆனால், இந்தியரே இந்திய ஆட்சியை ஆக்குவதற்கு, அழிப்பதற்கு உரிய அரசியல் விடுதலை அளித்தபின்பே உலகில் அவர்கள் குடியாட்சி மரபுக்குப் பெருமை ஏற்படும் என்ற நிலை கண்டனர். ஆயினும், அயலாட்சி ஆள்பவர்க்கு இனிப்பானதே என்பதை அவர்கள் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் எகிப்திலும் காட்டியே வந்துள்ளார்கள்.

எகிப்தில் பிரிட்டன் சூயஸைக் குடியாட்சி முறைப்படி எகிப்துக்கு விட்டு விட ஒருப்படவில்லை. கிழட்டு ஏகாதிபத்தியம் ஆனாலும் பல்லில் அகப்பட்டதை, வேறு வழியில்லாத நிலை வரும்வரை, விட்டுக் கொடுக்க மனம் வருவதில்லை!

இந்து சீனாவில், இந்தோனேஷியாவில். பிரஞ்சு, டச்சு அரசியல்களும், கோவாவில் போர்ச்சுக்கீசு அரசியலும்; ஆப்பிரிக்காவில் பெல்ஜியம் முதலிய மற்ற ஐரோப்பிய அரசுகளும் இன்னும் தங்கள் ஏகாதிபத்தியப் பிடியைக் கூடியமட்டும் சாதித்துக் கொள்ளவே விரும்புகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்புக்கூட, இந்த ஏகாதிபத்தியப் பிடிகளைக் கண்டும் காணாததுபோலவே இருக்க நேர்கிறது - அதன் தலைமை உறுப்பினர்களே ஏகாதிபத்திய வாதிகளாக இருப்பதால்!

பல் பிடுங்கப்பெற்று வரும் மேலை ஏகாதிபத்தியங்களின் அருகே, வளர்ந்துவரும் மக்கள் வல்லரசுகளான அமெரிக்கா, இரஷ்யா, சீனா ஆகியவற்றுடன் போட்டியிட்டுக்கொண்டு, தனக்கென ஒரு புதுவகை ஏகாதி பத்தியத்தைத் தில்லித் தெய்வங்கள் கனவில் கண்டு விரைந்து நனவில் பின்னி வருகின்றன. புலி ஏகாதிபத்தியங்கள் பூனை ஏகாதிபத்தியங்களான பின்பு, இங்கே ஒரு பூச்சி ஏகாதிபத்தியம், சிலந்தி ஏகாதிபத்தியம் காணமுயன்று வருகிறது. புலிகள் கோரப் பற்களைக் காட்டின. ஆனால், இந்தியாவிலோ மாயவலை விரித்து அது பூச்சிகள் வரும்வரை