பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




330

அப்பாத்துரையம் - 2 நிலைக்க முடியாத நிலை ஏற்படுவது உறுதி. தென்னாடு வடவர் பிடியிலிருந்து விடுபட வேண்டுமானால் அந்நிலை ஏற்பட்டாதல் வேண்டும்.

தமிழகத்திலும் தென்னாட்டிலும் காங்கிரசுக்கு ஒரு தடவை தோல்வி ஏற்பட்டுவிட்டாலே, காங்கிரசு மேலிடத்தைப் பிடித்துள்ள முதலாளிக் கும்பலின் பிடிப்பு அற்றுவிடும். ஏனெனில், தேசப் பற்றுதலால் அவர்கள் காங்கிரசைக் கைப்பற்றவில்லை. பண ஆசை, கொள்ளை ஆதாய ஆசை, சுரண்டுதல், சந்தர்ப்பம் ஆகியவற்றின் காரணமாகவே அவர்கள் காங்கிரசைக் கைப்பற்றியுள்ளனர். ‘ஆலிலை பூவும் காயும் அளிதரு பழமும்' பெற்றிருந்தபோது அணுகி, அவை போனபின் போய்விடும் பறவைகள் போல, ஆட்சியிலிருக்கும் கட்சியானால் ஆதாயமிருக்கும்வரை போலி நண்பர்களாக அதில் ஒட்டியிருந்து விட்டு அவர்கள் புதிய ஆட்சிக் கட்சிகளையே பற்ற எண்ணு வார்கள். அச்சமயம் மக்கள் குரல் எழுந்து, புதிய ஆட்சி களிலிருந்து அவர்களைத் துரத்திவிடமுடியும். காங்கிரசு எழுப்பிய விடுதலைப் புகழ் முழக்கத்தாலேயே மக்கள் மயங்கிக் காங்கிரசில் முதலாளி பிடி வலுப்பட்டதைக் காணாதிருந்தனர்.

தமிழர் மொழியையும் நாட்டையும் இனத்தையும் வாழ்வித்து, உன்னையும் உன் பின் மரபினரையும் உயர்த்தி உலகில் உயர் இடம் பெறச் செய்யும் இந்தத் தேர்தலில் விழிப்பாயிரு. இனக்குரலின் பக்கம் உன் உள்ளமும், உள்ளத்தின் திசையிலே உன் மொழியும் செல்வாக்கும் பயன்படுத்தி, உன் சீட்டையும் உன் உற்றார் உறவினர்களின் சீட்டையும் இனக்குரலின் உரிமைச் சீட்டுகளாக்குவாயாக.

உன் நாட்டுத் தொழில் வாழ, வாணிகம் பெருக, வடநாடு போலவே உன்நாடும் உலகில் உயர் இடம் பெற உன் சீட்டைப் பயன்படுத்து. தமிழக மறுமலர்ச்சிக் கட்சிக்கே, தென்னகப் புதுவாழ்வுக் கட்சிக்கே, வள்ளுவர் மரபில் நின்று வான்புகழ் நாடும் குரலுக்கே ஆதரவளிப்பாயாக.