பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




334

அப்பாத்துரையம் - 2

'குடியாட்சியில் உரிமை குடிகளிடம் என்றும் நிலைப்பதாய் இருக்க வேண்டுமே. இன்றைய தமிழகக் காங்கிரசுக்காரர் எல்லாரும் இந்தியை ஏற்றுக் கொண்டாலும், அவர்களது இந்த முடிவு வருங்காலத் தமிழகக் காங்கிரசுக் காரரைக் கட்டுப்படுத்த முடியுமா? இன்றைய தமிழர்கள் அனைவரும் அம்முடிவை ஏற்றாலும், நாளை பிறக்க இருக்கும் தமிழர்களை அஃது எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?'

இந்த உரிமை வாதங்களைத் தமிழன் எழுப்பினால் வடதிசை அல்லது வடதிசைக்கு வழக்குரிமை வாங்கிக்கொண்ட தென்திசை-சீறும். ஆனால், அந்தச் சீற்றத்திலேயே சமத்துவ மில்லாப் பண்பு வெளிப்பட்டுவிடும்.

தேசியம் என்று அவர்கள் கூறும் இந்தியாவில் மொழிக்கு மொழி சமத்துவம் என்றால் அடிக்க வருகின்றனர்-இனத்துக்கு இனச் சமத்துவம் என்றால் சீறுகின்றனர்!

'இந்தியா ஒரு தேசம். அதன் ஒற்றுமைக்காக இந்தி படி’ என்கின்றனர்.

இந்தியா ஒரு தேசம், சரி! அதில் இருபது மொழிகளே மக்கள் பேசுகிறார்கள்.பொது ஆட்சிக்கு ஒரு மொழி வேண்டும் என்கிறார்கள். மக்கள் மொழிகள் இருபது. ஆளுபவன் மொழி ஒன்று . மக்கள் ஆளுபவன் மொழியைப் படித்துக்கொள்ளுதல் வேண்டுமாம். ஏன் ஆளுபவர் இருபது மொழிகளைக் கற்றுக்கொண்டு ஆளக்கூடாது? இருபது மொழிகளில் ஏன் சட்டங்களை வெளியிடக் கூடாது? இருபது மொழிகளில் ஏன் அஞ்சல் வில்லைகள் பண அஞ்சல் கட்ட ளைகள் (money order form) உருவாக்கக் கூடாது? இருபது மொழிகளில் ஏன் ஊர்திநிலையப் பலகைகள் தொங்க விடக்கூடாது?

இவ்வளவு பெரிய தேசத்தின் ஆட்சி ஏற்றவன் கையில் பணம் கிடையாதா? மக்களை- தாய்மொழிகூடப் படியாத மக்களை-இன்னொரு மொழி படிக்கச் சொல்வதைவிட, அவர்கள் பணத்தை எத்தனையோ வீண் செலவுகளுக்குப் பயன்படுத்துவதற்குப் பதில் இருபது மொழிகளைக் கற்று ஆளப் பயன்படுத்துவதுதானே!