பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. உத்சுசேமி

கெஞ்சியின் கண்கள் இப்போதும் உறங்க மறுத்தன. அவன் சிறுவன் செவிகளில் தன் குறைகளை ஓதினான், 'என்னை இதுவரை எவரும் இப்படி வெறுத்ததில்லை. என்னால் இதைத் தாங்க முடியாது, எனக்கு இப்போது வாழ்வும் வெறுத்து விட்டது, இந்த உலகத்தின் மீதும் வெறுப்பு ஏற்பட்டு விட்டது, இனியும் இப்படியே வாழ்வை நீட்டிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை' என்று முணுமுணுத்தான். சோகமிக்க இச்செய்தி கேட்டுச் சிறுவன் மனமுருகி அழத் தொடங்கினான்.

மென்மை வாய்ந்த அந்தச் சிறிய உருவம் -பசுமையார்ந்த அவன் தலை முடி குறுகத் தறித்துவிடப்பட்ட வகைகூடக் கெஞ்சியின் கண்களுக்கு அவன் தமக்கையின் இனிய தோற்றத் தையே நிழற்படுத்திக்காட்டிற்று, அவன் ஒத்துணர்வு கெஞ்சியின் உள்ளங்கசிய வைத்தது.

அவ்வப்போது அவன் எண்ணங்கள் கட்டறுத்தோடின. அடிக்கடி சிறுவனருகிலிருந்து நகர்ந்து வெளியேறிச் சென்று தானாக உத்சுசேமியின் தங்கிடம் தேடிச் செல்லலாமா என்று ஆலோசனை செய்தான். ஆனால், இது உண்மையில் மிகப் பெரும் பொல்லாங்குக்கே இடம் தரும் என்று கண்டு அவன் அக்கருத்தைக் கை விட்டான், இரவு முடியும் வரை இத்தகைய ஊசலாட்டங்களிடையே உழன்றுழன்று இறுதியில் வேண்டா வெறுப்புடன் பொறுமையாக விடியற்காலை ஒளியை எதிர் பார்த்து உருண்டு புரண்டான்.

அரையிருட்டிலே, முற்றிலும் விடியுமுன்பே அவன் எழுந்தான், எப்போதும் போலச் சிறுவனிடம் கூறிவிட்டுப் போகும் வழக்கத்தைக்கூட அன்று மறந்தான், அவன் நெஞ்சம் அழன்றெழும் எண்ணங்களால் அந்த அளவு நிரம்பி நிலையற்றிருந்தது.