பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

|-

அப்பாத்துரையம் - 22

விரும்பினேன், நீ என்னைக் காண வரவேயில்லை. காத்திருந்து அலுத்த பின்னரே நான் இந்நோன்பை மேற்கொண்டேன். இப்போது என் திருவார்ந்த சங்கம் கட்டளையிட்ட நல்லறங்களைச் செய்ததன் பயனாக, என் இளஞ்சிறுவனே என்னைத் தேடிவரும் பரிசு எனக்குக் கிட்டியுள்ளது. அத்துடன் என் உடல் நலங்கூடச் சிறிது மீண்டிருக்கிறது. உன்னைக் கண்டதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் இனி நான் பகவான் அமிதனாகிய புத்தர் பிரான் ஒளிக்கு மனநிம்மதியுடன் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்க முடியும்' என்றாள்.

அவள் முதுமைப்பாசம் ஒரு சில துளிக் கண்ணீராக அவள் கன்னங்களில் படிந்தன.

கெஞ்சி பணிவன்புடன் மறுமொழி கூறினான்.

'நீங்கள் பொல்லா நோய்க்கு ஆட்பட்டு நலிவடைந்து இருக்கிறீர்கள் என்று சில நாட்களுக்கு முன் கேள்விப்பட்டேன். அதனால் எனக்கு ஏற்பட்ட கவலை பெரிது. இப்போதுகூட உங்களை இந்த நோன்பாடையில் காண வருத்தமாகவே இருக்கிறது. என் விருப்பம் - நீங்கள் இன்னும் நீண்டநாள் வாழ்ந்து, உலகில் நான் இன்னும் உயர் படிகளுக்கு முன்னேறுவதைக் காண வேண்டும் என்பதே. ஏனென்றால். அப்போதுதான் நீங்கள் திரும்பப் பிறக்கும் சமயம் அமித நாதனின் இன்ப உலகில் ஒன்பதாவது கோளத்தில் சென்று பிறக்க வழி ஏற்படும். நிறைவேறாத விருப்பங்களுடன் மாள்பவர் அந்த அவாக்களின் தீவினைப் பயனால் பளு உடையவர்களாகித் தாழநேர்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்' என்றான்.

செவிலித்தாயர் போன்ற முது மக்கள், தங்கள் வளர்ப்புக் குழந்தைகள் கருங்குரங்கு போன்ற தோற்றமுடையவர் களானால் கூட அவர்களை வனப்புமிக்க குணமணிகளாகக் கொள்வது வழக்கம். அப்படியிருக்க, கெஞ்சியின் இளமை வாழ்வில் பேரிடம் வகித்த அம்மாது தன் பணி மிகவும் மகிமை வாய்ந்தது, முக்கியத்துவம் உடையது என்று கருதியதில் வியப்பில்லை. கெஞ்சி பேசிய சமயம் பெருமிதம் நிறைந்த இன்பக் கண்ணீர் அவள் கண்களில் ததும்பிற்று.