பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

137

இலையுதிர் காலம் தொடங்கிற்று. கெஞ்சியின் வாழ்க்கையில் மேன்மேலும் பெருகி வந்த சிக்கல்களால் நெடுமாடத்துக்கு அவன் போக்கு வரவுகள் மிகவும் தடைபட்டன. இதனால் அத்திசையில் அவன் அவப்பெயருக்கு ஆளாயிருந்தான். அத்துடன் பூங்காமாடத்திலுள்ள ரோக்கு ஜோ பெருமாட்டியின் தொடர்பு அவனுக்கு மிகவும் இக்கட்டுகள் தருவதாயிருந்தது. இப்போது தடைகள் தளர்வுற்று வெற்றி கிட்டிய இத்தருணத்தில் அவளை விட்டு விடுவதென்பது பொருளற்றதாயிருந்தது. இருந்த போதிலும் அவள் எட்டாக் கனியாய் இருந்த காலத்தில் அவள் வகையில் அவனைப் பிடித்தாட்டி வந்த கண் கால் தெரியாத அடக்க முடியாத ஆர்வ அவா இப்போது பெரிதும் மறைவுற்றே வந்தது. இதற்குரிய காரணங்களில் ஒன்று -அவள் எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகி விடுபவளாய் இருந்தமையே. அவர்கள் வயது ஏற்றத் தாழ்வு, மறை வெளிப்பட்டுவிடுமென்ற இடைவிடாத அச்சம் ஆகிய இவையும் வெறுப்பைப் பெருக்க உதவின. சிறப்பாகக் காலையில் அவர்கள் விடை பெற்றுப் பிரியும் நேர முழுவதும் இரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்துக்குரிய நேரமாகவேயிருந்தது.

மொத்தத்தில், இத்தொடர்பிலுள்ன நலங்களைவிடத்

தீங்குகளே மிகுதியாயிருந்தன.

ஒரு நாள் காலையில் மூடுபனி தோட்ட முழுவதும் திரையிட்டு மூடியிருந்தது. பலதடவை துயிலெழுப்பப்பட்டபின், கெஞ்சி இறுதியாக ரோக்குஜோ பெருமாட்டியின் வீட்டிலிருந்து வெளிவந்தான். அவன் முகம் உறக்கச் சோர்வால் களையற்றும் சிடுசிடுப்புற்றும் இருந்தது.

பணிப்பெண்களில் ஒருத்தி பலகணியின் மடக்குச் சட்டங்களைப் பாதி உயர்த்திக் கொண்டு கெஞ்சி செல்வதைப் பார்க்கும்படி தன் தலைவியான ரோக்குஜோ பெருமாட்டியை அழைத்தாள். அவளும் படுக்கையின் திரைகளை விலக்கிக் கூந்தலைத் தோள்களுக்குப் பின்னால் தள்ளிவிட்டுக் கொண்டு அவளை நோக்கினாள்.

தோட்டத்தின் எல்லையில் எத்தனையோ வனப்பு மிக்க மலர்கள் இருந்தன. கெஞ்சி சிறிது தங்கி அவற்றின் அழகில்