பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

141

அந்த வண்டியை நான் என் கண்ணாலே பார்க்க வேண்டும்” என்று கூறிக் கொண்டான் கெஞ்சி. மழை நாள் இரவின் உரையாடலில் தோ நோ சூஜோ தான் கைதுறந்து, பின் ஆர்வத்துடன் தேடியதாகக் குறிப்பிட்ட நங்கை இவளாகவே இருக்கக் கூடுமோ என்று அவன் ஐயுற்றான். தன் தகவல்களில் கெஞ்சி காட்டும் ஆர்வத்தை உணர்ந்த கோரெமிட்சு மேலும் பேசினான்.

'இம்மனையில் இப்போது எனக்கும் ஒரு தனி ஆர்வம் ஏற்படக் காரணம் இருக்கிறது. நானாக முதலில் விசாரணை செய்யும்போது மனைத் தலைவி மற்றப் பெண்களுடன் சரிசம நிலையிலேயே பேசிப் பழகியது கண்டேன். இந்த நாடகத்தை அப்படியே நம்பி விட்டதாகப் பாவித்து நான் அங்கே அடிக்கடி போய் வரத் தொடங்கினேன். அப்போது வயது சென்ற மாதர் மட்டுமே இவ்வகையில் தம் நடிப்பைத் திறம்படக் கொண்டு செலுத்தினர் என்பதைக் கண்டேன். இளம் பெண்களோ அவ்வப்போது தம்மையறியாமல் தலைவியை வணங்கினர். சில சமயம் ‘ஆண்டை' என்று விளித்துவிட்டு, பின் அதை அடக்கி மழுப்பப் பார்த்தனர். மற்றத் தோழியர்களும் இத் தவற்றைத் தம்மாலான மட்டும் பூசிமெழுக வேறு ஏதாவது பொய் புனைந்துரை அளந்தனர்.

'இவற்றை நினைக்கும் போதே எனக்குச் சிரிப்பு வருகிறது' என்று கோரெமிட்சு சொல்லி முடித்தான்.

‘அடுத்த தடவை நான் உன் அன்னையாரைப் பார்க்க வரும் சமயம் நானும் அவர்களை உற்றுக் கவனிக்க வாய்ப்புப் பெற வேண்டும்' என்று கெஞ்சி கோரெமிட்சுவிடம் தெரிவித்தான்.

இடிந்து தகர்ந்த அந்தப் புதுமை வாய்ந்த மனை அவன் மனக்கண்முன் வந்து நிழலாடிற்று. ‘அவள் அங்கே தற்காலிக மாகத்தான் வந்து வாழ்ந்து வர வேண்டும்; நிலையாக வல்ல. ஆயினும் எப்படியும் நண்பர் உரையாடலில் வாதத்துக் குரிய தல்ல என்று ஒதுக்கப்பட்ட கடைசி வகுப்புக்கே அவள் உரிய வளாதல் வேண்டும். ஆனால் நண்பர்கள் கூறிய முடிவு தவறு என்றும், எப்படியும் இத்தகைய இடத்தில் சுவைகரமாக ஏதாவது காணப்பட முடியுமென்றும் எண்பிப்பதில் எவ்வளவு உற்சாகம் எழ வழியுண்டு!' - இவ்வாறு அவன் எண்ணமிட்டான்.