பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

143

தன்னைவிட்டுக் காலையில் செல்லும்போது அவன் எங்கே போகிறான் என்று காண்பதற்குக்கூட அவள் ஆட்களை அமர்த்திப் பார்த்தாள். ஆனால் கெஞ்சி எப்போதும் பின் தொடர்பவர்களுக்குத் தவறான திசை காட்டி ஏமாற்றி வந்தான்ஆகவே அவனைப்பற்றி அவள் முன்போலவே எதுவும் தெரியாதவளாயிருந்தாள்.

அவளிடம் அவன் பாசம் வளர்ந்து வந்தது. சந்திப்புக்குத் தடையாக ஏதேனும் நிகழ்ந்தால் அவன் வேதனையடைந்தான். அடிக்கடி தன் போக்கை அவன் தானே கண்டித்துக் கலக்க முற்றாலும், தன்னையறியாமல் அவன் அவள் மனையையே சுற்றி வட்டமிட்டு வந்தான்.

மிகத்தெளிந்த

அறிவமைதி உடையவர்கள்கூட வாழ்க்கையின் ஏதேனும் ஒரு பருவத்தில் இவ்வகையில் மயக்கமடைந்து அறிவு திரிந்து நடப்பதுண்டு. இது கெஞ்சி அறியாததன்று. ஆனால், அவன் இதுவரை எதிலும் அவ்வாறு அறிவு திரிவுற்றதுமில்லை. அது காரணமாகத் தவறான எதுவும் செய்ததும் இல்லை. ஆனால் இப்போதோ, காலையில் அவளை விட்டுப் பிரிந்திருக்கும் ஒருசில மணி நேரத்தில்கூட அவனால் இருக்கை கொள்ள முடியவில்லை. இது அவனுக்கே வியப்பும், மலைப்பும் அளித்தது. 'இப்படி என்னைப் பைத்தியக்காரனாக்க அவளிடம் என்ன இருக்கக்கூடும்' என்று அவன் அடிக்கடி எண்ணிப் பார்த்தான்.

அவள் வழக்க மீறிய அமைதியும் பணிவும் உடைய வளாகவே இருந்தாள். சில சமயம் உணர்ச்சியற்றவளோ, அவ்வகைப் பண்புத்திறங்களே முற்றிலும் இல்லாதவளோ என்று நினைக்குமளவு இப்பொறுமை பெரிதாயிருந்தது. அதே சமயம் அனுபவமற்ற சிறு பெண்ணின் தன்மை ஓரளவு அவளிடம் இருந்தாலும், கெஞ்சி எவ்வகையிலும் அவள் முதல் காதலனல்லன்; அவள் அவ்வகை அனுபவம் அற்றவளுமல்லள்; அவள் உயர் வாழ்க்கைப் பண்புடையவளுமல்லள்; பொது நிலை நங்கையர் இயல்புடையவளே. 'இந்நிலையில் அவளுக்குரிய கவர்ச்சி யாதாயிருக்க முடியும்?' - இக்கேள்வியை அவன் மீண்டும் மீண்டும் தன்னை நோக்கிக் கேட்டுக் கொண்டான். அதற்கு ஒரு விடையையும் அவன் காணவில்லை.