பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

161

மனைக்காவலன் புதல்வனை அவன் அழைத்தான். இங்கே அச்சத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டு மிக மோசமானநிலை ஏற்பட்டிருக்கிறது. நீ கேரொமிட்சுவின் வீட்டுக்குப்போய் எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வரும்படி சொல்லு. புரோகிதராகிய அவன் உடன்பிறந்தார் அங்கே இருந்தால், அவரைத் தனியாகப் பார்த்து, நான் அவரை உடனே காண விரும்புவதாக மெள்ள அவரிடம் சொல்லு. எப்படியும் துறவு நங்கையாகிய அவர்கள் தாய் கேட்கும்படி எதுவும் சொல்லாதே. ஏனெனில் நான் ஈடுபட்டுள்ள இந்த முயற்சி முழுவதுமே அவள் அறியக் கூடாததாக இருத்தல் வேண்டும்' என்று அவன் கட்டளையிட்டான்.

சொற்கள் தான் இவ்வாறு எப்படியோ தெளிவாக வெளி வந்தனவே ஒழிய, மூளை முற்றிலும் குழம்பியே இருந்தது. ஏனெனில் அணங்கின் முடிவுக்குத் தானே காரணம் என்ற எண்ணம் அவனைஒரு புறம் வாட்டிற்று, மறுபுறம் நிகழ்ச்சிக்கு இடமான சூழல் முற்றிலும் இன்னும் கோர உருவில் அவன் உள்ளத்தை அழுத்தி அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.

நடு இரவு கழிந்துவிட்டது. வலங்கொண்ட புயலொன்று எழுந்து மனையின் நாற்புறத்திலும் உள்ள செந்தூர மரக் காடுகளினூடாகச் சுழன்றடித்து ஊளையிட்டது. ஆந்தைபோன்ற ஏதோ ஒரு பறவை இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறிற்று. எங்கும் இருண்டபாழ், பாழ் இருட்டு மனிதநாதம், பாசக்குரல் அற்ற வெற்றிடமாகக் காட்சியளித்தது.

இத்தகைய பொல்லாத இடத்தைத் தங்குவதற்கு ஏன் தேர்ந்தெடுத்தேனோ என்று கெஞ்சி அங்கலாய்த்துக் கொண்டான்.

உகானுக்குத் தன் உணர்வு இல்லை. அவள் தன் தலைவியின் அருகே கிடந்தாள். அவளும் கிலியால் உயிரிழக்கப் போகிறாளோ என்னவோ? இல்லை, இல்லை! இத்தகைய நச்சு எண்ணங்களுக்கு இடங்கொடுத்து விடக்கூடாது!' என்று அவன் தனக்குத்தானே தடை இட்டுக்கொண்டான். இப்போது செயல் செய்யும் ஆற்றலுடையவனாக அங்கே இருந்தவன் அவன் ஒருவன்தான். ஆனால் அவன் என்ன செய்ய முடியும்? 'உடனடியாகச் செய்யக் கூடியது எதுவும் இல்லையா?'