பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




176

அப்பாத்துரையம் - 22

கெஞ்சியின் உடல் மிகவும் பலவீனமாய் இருந்தது. பேசக்கூட அவனுக்குத் திராணியில்லை. ஆனால் இந்த நிலையிலும் அவன் அடிக்கடி அடங்கிய குரலில் தயங்கித் தயங்கி உகானிடம் பேசிவந்தான். அடிக்கடி கண்ணீருடன் பேசுவான்.

'உன் தலைவியின் வாழ்வை அவ்வளவு விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்த அதே ஊழ் என்னையும் தாக்கியுள்ளது என்று எண்ணுகிறேன். இந்த உலகில் நான் இனி நெடுநாள் இருக்கப்போவதில்லை என்று அது முடிவு செய்திருக்கிறது. அவள் உன்னைவிட்டுச் சென்றதனால் உனக்கு என்ன மாறாத் துயர் ஏற்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். அவள் அத்தனை ஆண்டுகளாக உனக்குத் தலைவியாக மட்டுமன்றித் துணைவியாகவும் இருந்தாள். இந்தப் பேரிழப்பின் பின் என்னால் இயன்ற முழு அளவிலும் அன்புடனும் உன்னிப்புடனும் உனக்கு வேண்டிய ஆறுதல்கள் அளிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். நான் இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கப் போகிறேன் என்பதில் எனக்கு உண்மையில் இந்த ஒரு காரணத்துக்காகவே தான் வருத்தம் ஏற்படுகிறது' என்று அவன் புலம்பினான்.

அவன் மறைவு தன்னை மீண்டும் துணையற்றவளாக்கி விடும் என்பதற்காகவன்று, அவன் இறந்துவிடப்படாதே என்று உண்மையிலேயே அவள் வருந்தினாள். ஏனெனில் அவனிடம் அவளுக்கு இப்போது ஆழ்ந்த பரிவும் பற்றுதலும் ஏற்பட்டு விட்டன.

அவன் பணிமைந்தர் மனக்குழப்பமுடன் அங்குமிங்கும் ஓடினர். சக்கரவர்த்தியின் தூதர்கள் செறிந்த மழைத்துளிகள் போல எங்கும் மொய்த்தனர். தந்தையின் கவலையையும் துயரத்தையும் கேள்வியுற்ற கெஞ்சி உடல் ஓரளவு தேறிவந்ததாக அல்லது குணமடைந்து விட்டதாக நடித்து அவருக்கு ஆறுதல் அளிக்க முயன்றான். அவன் மாமனாரும் அவன் நிலைபற்றி மிகமிக வருத்தமுடையவராயிருந்தார். ஒவ்வொரு நாளும் அவன் உடல் நலம் பற்றிய தகவலுக்காக அவர் தாமே வந்துவந்து போனார்.

அவன் நலம் பெறுவதற்காகவே பல வினைமுறைகளிலும் ஆற்றல் வாய்ந்த தெய்வ நேர்ச்சிகளிலும் ஈடுபட்டு அவற்றை நடத்துவித்தார். இவற்றின் பயனாகவோ