பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

முகப்பு உரை

செய்ஜி ரோ -யோஜி சாவா

கெஞ்சி கதைகள்" ஹீயான் ஆட்சி மரபுக்குரிய தலைசிறந்த எழுத்தாளாரான முரசாக்கி சீமாட்டியாரால் (கி.பி.975-1031) இயற்றப்பட்ட நெடு நீளமானதொரு வண்ணக் கதை (நாவல் )ஆகும். ஆண் பெண் இரு பாலரிடையேயும் எண்ணற்ற ஈடும் எடுப்புமில்லாத கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஜப்பான் படைத்து உருவாக்கிய காலம் அதுவே. தவிர அந்நாட்கள்வரை எழுதப்படவேண்டிய எதற்கும் ஒரு சொல்லைக் குறிக்க ஒரு தனிக் கருத்துக் குறியீடாக அமைவுற்ற பாரிய சீன எழுத்து முறையையே பின்பற்ற வேண்டியதாயிருந்தது. இதற்குப் பதிலாகக் கடுஞ் சிக்கல் வாய்ந்த இம் முறையிலிருந்தே உருவான எளிய ஒலிக் குறியீட்டு வாய்ப்புடன் புதிய ‘கனா' எழுத்துமுறை அக்காலத்திலேயே வழக்கில் புகுந்தது. கருத்துகளை வரி வடிவில் பதிவு செய்யும் வேலையை இது எளிதாக்கி இலக்கியப் படைப்புக்கு ஓர் உயிர்த் தூண்டுதல் அளித்தது. மேலும் சீன நாகரிகத்துடன் தொடர்பு ஏற்பட்ட நாள்முதல் சில காலமாக ஜப்பான் அப்பெருநாட்டின் மேம்பட்ட செல்வாக்கு வெள்ளத்துள் மூழ்கிக் கிடந்தது. இந்நிலையிலிருந்து மீண்டு ஜப்பான் தன் மரபுரிமையை வலியுறுத்தத் தொடங்கியதும் ஜப்பானியக் கலை நாகரிக வரலாற்றின் பொன்னூழி என்று கருதப்படும் இந்த ஹீயான் மரபின் ஆட்சிக் காலத்திலேயே ஆகும். இப் புத்தெழுச்சியில் ஜப்பானுக்குப் புதிய ஊட்டமும் உரமும் தந்து நிறை வளித்த நாகரிகம் ஒன்று உண்டு. ஆசியத் தலைநிலத்திலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட நாடான ஜப்பானுக்கு அதுவரை அயல் நிலமாக நிலவியிருந்த அந்த நாகரிகம் புத்த நெறியையே தன்னுள் அடக்கிக்கொண்டுள்ள சீரிய நாகரிகமே ஆகும்.