பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

189

பத்தாவது மாதம் முதல்நாள் அணுகிற்று. குளிர் காலம் தொடங்கி விட்டதென்பதைக் காட்டும் அறிகுறிபோல, கடுமழை பெய்தது. நாள் முழுதும் கெஞ்சி புயலார்ந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆ, இலையுதிர்காலம் ஏற்கெனவே பயங்கரமான முறையில் ஒரு பேரிழப்பை உண்டு பண்ணி விட்டது. இப்போது குளிர் காலமும் அவனால் அருமையாக நேசிக்கப்பட்ட ஓருயிரை அவனிடமிருந்து பிரித்தது.

'இருவழியும் சென்று கண்டே இடர்ப்பட்ட வழிப்போக்கன் ஒருவழியும் காணாது உழலுதல் போல் யானுமிங்கே இருபருவ இடர் கண்டு தேறாது திகைக்கின்றேன்’

தான் ஈடுபட்ட இரகசியக் காதல் விளையாட்டுகளால் மாளாத் துயரல்லாமல் வேறு எதுவும் விளையாதென்ற உண்மையைக் கெஞ்சி இப்போதாவது தெள்ளத் தெளியக் கண்டிருக்கக்கூடும்!.

உலகின் பார்வையிலிருந்து கெஞ்சி மறைத்துவிடஎண்ணிய செய்திகளையே நுணுக்கவிரிவுபட முழுவதும் விளக்கியுரைக்க உண்மையில் எமக்கு விருப்பமே யில்லை. ஆயினும் அவற்றுள் எதையேனும் யாம் கூறாது விட்டுவிடுவோமானால், வாசகராகிய நீங்கள் உடனே 'ஏன், எதனால்?' என்று கேட்டுவிடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். கெஞ்சி ஒரு சக்கரவர்த்தியின் திருமகன் என்பதற்காக, அவன் தவறுகளையெல்லாம் கத்தரித்து விட்டு அவன் நடத்தைக்கு ஒரு முலாம் பூச வேண்டுமா?' என்ற கேள்வி எழாமல் இராது, இது மட்டுமோ? இது ஒரு வரலாறல்ல; பின்சந்ததியாரின் பகுத்தறிவு கூறவேண்டிய தீர்ப்பை மெல்லத் திரித்து உருவாக்குவதற்கென்று இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதை யென்றுகூடக் கூறிவிடுவார்கள். இதனால்தான் ஒரே வதந்திக் கோவையாக வம்பளப்பவர் என்று கருதப்பட்டால்கூடக் கேடில்லை என்று எண்ணி, எல்லாம் பட்டவர்த்தனமாகத் துணிந்து கூறிவிட்டோம்!