பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

191

அனுட்டானங்களால்கூட கட்டுண்ட இளவரசனுக்கு, அவற்றின் தங்குதடையற்ற வடிவுருவங்களைக் காண மிகவும் உவகை ஏற்பட்டது. ஏனெனில் இத்தகைய காட்சிகளை அவன் கண்டதில்லை. கோவில்களின் சிற்ப அமைதியிலும் அவன் ஈடுபட்டு மகிழ்ந்தான்.

உயர்ந்த மதில்போன்ற பாறையில் குடைந்து எடுக்கப்பட்ட ஒரு குகையிலேயே துறவி வாழ்ந்து வந்தார். கெஞ்சி தன் பெயரைக் குறிப்பிட்டனுப்பவில்லை, அத்துடன் அவன் பெரிதும் உருமாற்றிக் கொண்டும் இருந்தான். ஆயினும் அவன் முகம் எல்லாரும் நன்கறிந்த ஒன்றாயிருந்ததால் துறவி கண்டவுடனே அவனை அடையாளமறிந்து கொண்டார். 'மன்னிக்கவேண்டும், ஐயனே! இரண்டொரு நாட்களுக்கு முன் என்னைக்கூப்பிட்டனுப்பியது தாங்கள்தான் என்று நினைக்கிறேன், அல்லவா? அந்தோ நான் இவ்வுலக நினைவுகளை விடுத்து நாட்கள் பல ஆய்விட்டன. என் பண்டுவ முறைகள்கூட மறந்து விட்டனவோ என்று அஞ்சுகிறேன். இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்களே என்று நான் மிகவும் வருந்துகிறேன்' என்றார். உண்மையிலேயே குழப்பமடைபவர்போல அவர் கெஞ்சியை நோக்கியவாறு நகைத்தார்.

ஆனால் அவர் பக்தி எவ்வளவு உயர்ந்ததோ, அவ்வளவு அவர் அறிவு ஆழமானது என்பது விரைவிலேயே தெரியவந்தது. அவர் சில சக்கரங்கள் வரைந்து தாயித்துக்கள் பூணுவித்தார்.சில மந்திரவாசகங்களை உச்சரித்தார்.

இதற்குள் கதிரவன் ஒளிபடர்ந்துவிட்டது. கெஞ்சி குகைக்கு வெளியே சென்று தன்னைச் சுற்றி நோக்கினான். அவன் நின்ற மேட்டிலிருந்து சிதறிக்கிடந்த எத்தனையோ துறவிகளின் திருமனைகளைக் காண முடிந்தது. வளைந்து வளைந்து செல்லும் ஒரு தடம் சற்றுத் தொலைவிலுள்ள வேறொரு குடிசை நோக்கிச் சென்றது. மற்றத் திருமனைகளைப் போலவே அதுவும் புத்தர்களால் கட்டப்பட்டிருந்தாலும், மற்றவற்றைவிட இடஅகலமாக அது திட்டமிட்டு அமைக்கப் பட்டிருந்தது. அதைச் சுற்றி மேற்கூரை வேய்ந்த ஓர் இன்பச் சாலையும், அதனையடுத்து நன்கு கத்தரித்துப் பேணப்பட்ட மலர்ப் பாத்திகளும் இருந்தன.