பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

||--

அப்பாத்துரையம் - 22

வகையாகச் சிறுமிக்கு மிக உயர்ந்த பண்பும் பயிர்ப்பும் கிட்டின' என்றான்.

மற்றொருவன் இப்போது தலையிட்டுத் தன் கருத்து உரைத்தான். 'பண்பறியாத எவரேனும் அப்பக்கம் சென்று அவளைக் கண்டால், தந்தையின் பழிக்குக்கூட அஞ்சாமல் அவள் கவர்ச்சியில் எளிதாகச் சிக்கிவிடக்கூடும் என்று எண்ணுகிறேன்' என்றான் அவன்.

கெஞ்சியின் கற்பனை உள்ளத்தில் இந்தக் கதை தன் ஆழ் தடம் பதித்தது. மனித வாழ்விலும் சரி, நிகழ்ச்சிகளிலும் சரி எங்கெல்லாம் பொதுநிலை மீறிய புதுமை காணப்படுகிறதோ, அங்கெல்லாம் அவனுக்குக் கவர்ச்சி பெரிதாவது இயல்பு. இதை அவன் துணைவர் பலரும் நன்கறிந்திருந்தனர். ஆகவே அணங்கின் செய்தியை அவன் ஆர்வத்துடன் கேட்டது அவர்களுக்கு வியப்பளிக்கவில்லை. அவர்களில் ஒருவன் இப்போது வாய் திறந்தான்.

‘நண்பகல் கழிந்து நெடுநேரம் ஆய்விட்டது. வழக்கமான உங்கள் வெப்பு வலி இன்று முழுவதும் வராது என்று நாம் திட்டமாகக் கொள்ளலாம். ஆகவே இப்போது நம் உறைவிடம் செல்வோம்' என்றான் அவன். ஆனால் துறவி அவர்களைத் தடுத்து இன்னும் சிறிது தங்கியிருந்து செல்லும்படி வேண்டினார். 'நோயின் தீய தடங்கள் இன்னும் முற்றிலும் அகன்றுவிடவில்லை. இரவிலும் மெல்ல வினைமுறைகள் நீடிப்பது நலம் தரும். ஆகவே நாளை காலையில் நீங்கள் உங்கள் மனை செல்லலாம்' என்றார்.

கெஞ்சியின் துணைவர்களும் அவனைத் தங்கிச் செல்லும் படி வற்புறுத்தினார்கள். அவனுக்கும் இது வெப்பாயில்லை. ஏனெனில் அவ்விடத்தின் புதுமை அவனை முற்றிலும் கவர்ந்திருந்தது. 'சரி, நாளைக்கே' என்று அவன் ஏற்றான். ஆனால் இரவில் உறங்கும் நேரம்வரை இன்னும் எவ்வளவோ சமயம் இருந்தது. அதுவரை வேலை எதுவும் இல்லாததனால் அவன் மலைச்சாரலில் உலவச் சென்றான்.

மாலை மூடுபனி அடர்த்தியாயிருந்தது. அதன் மறைவில் புதர்வேலிக் கருகாகவே அவன் நடமாடினான்.