பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

203

தன் கருத்தைக் கவர்ந்த பெண்டிரைக் காண இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கெஞ்சி எண்ணினான். அதே சமயம் முதியவர் அவர்களிடம் தன்னைப் பற்றி என்னென்ன கூறியிருப்பாரோ என்ற எண்ணம் அவனை ஒரு சிறிது தயங்கவைத்தது. ஆயினும் என்ன? என்ன வந்தாலும் அந்த அழகிளஞ் சிறுமியைக் கண்டுதானாக வேண்டுமென்று எண்ணியவனாய், அவன் துறவியைப் பின்தொடர்ந்தான்.

மலைப்பக்கங்களுக்கு இயல்பான செடி கொடிகள் தோட்டத்தில் நல்லமுறையில் அழகு படத் தொகுக்கப் பட்டிருந்தன. அன்றிரவு நிலவு இல்லை. ஆனால் நாற்புற அகழியின் இருமருங்கிலும் பந்தங்கள் ஒளிவீசின. தோட்டத்திலுள்ள மரங்களில் வானுலக விளக்குகள் போலத் தாளாலான ஒளிக்கூண்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தன முன்கூடம் மிக அழகுபட ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மறைவிடத்தில் வைத்துப் பேணப்பட்ட நறும் புகைக்கலங் களிலிருந்து மனையெங்கும் இனிய நன்மணம் கமழ்ந்தது. அந்நறும் புகைகள் வெளிநாட்டு மணப்பொருள்கள் கலந்தவை. கெஞ்சி இதற்குமுன் இதுபோன்ற மணம் நுகர்ந்ததில்லை. உள்ளறையிலிருந்த பெண்டிரின் அறிவுத்திறமும் கைத்திறங் களுமே இத்தகைய மாயக் கலவைகளை உருவாக்கியிருக்க வேண்டுமென்று அவன் நினைத்தான்.

வாழ்வின் நிலையாமை, வருகின்ற வாழ்வின் வினைப் பயன்கள் ஆகியவற்றை விளக்கும் பல கதைகளைத் துறவி எடுத்துக் கூறினார்.அது கேட்கும் சமயத்தில் கெஞ்சி தன் தீவினைகளின் பளுவை எண்ணி எண்ணி மன நைவுற்றான். தற்போதைய வாழ்விலே தன் மனச்சான்று தரும் தண்டனையே மிகப் பெரிதென்று அவன் எண்ணியிருந்தான். இப்போது வருங்காலத் தண்டனை வேறு உண்டு என்று கண்டான். என்ன பயங்கரம்!.. துறவி பேசிக் கொண்டிருந்த சமயம் முழுவதும் அவன் தன் கொடுவினைகளையே எண்ணிக் கொண்டிருந்தான். இத்துறவியையே பின்பற்றி இதே இடத்தில் வந்து துறவு மேற்கொண்டு விட்டாலென்ன என்ற கருத்து இச்சமயம் அவன் உள்ளத்தில் மிதந்தது. ஆனால் மாலை நேரத்தில் கண்ட அழகுமுகம் நினைவுக்கு வந்தவுடனே இந்த எண்ணங்கள்