பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(220

||-

அப்பாத்துரையம் - 22

வயதுதான். ஆயினும் அவளை வேறு எப்படியாவது தலைநகருக்குக் கொண்டு வரும்படி செய்தாலென்ன? அதற்கான சாக்குப் போக்குக் கூறுவது எளிதாயிருக்கும். இந்த ஏற்பாட்டினால்கூட அவன் எவ்வளவோ இன்பம் பெற வழி உண்டு என்று நினைத்தான்.

சிறுமியின் தந்தையான ஹியோபுகியோ இளவரசன் நல்ல நடை நயமுடையவன்தான். ஆனால் அவன் அழகுடையவன் அல்லன. ஆயினும் குழந்தை அவனைப் போன்றிராமல் அவன் உடன் பிறந்தாளைப் போன்றதாக எப்படி அமைந்தது? ஹியோபுகியோ இளவரசனும் இளவரசி புஜித்சுபோவும் உடன் சி பிறந்தவர்கள் மட்டுமல்லர், ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள், மற்ற உடன்பிறந்தார்கள் தாய் வேறு பாடுடையவர்களா யிருந்திருக்க வேண்டும் என்று அவன் மதித்திருந்தான், அவனால் மிகவும் நேசிக்கப்பட்ட அணங்குடன் சிறுமி உறவும் ஒப்புமையும் ஒருங்கே உடையவளாயிருந்ததனால், அவளைக் கைப்பற்றும் திட்டத்தில் அவன் ஆர்வம் இன்னும் பன்மடங்கு பெருக்கமுற்றது. அதை நிறைவேற்றுவது எவ்வாறு என்று அவன் மேன்மேலும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.

மறுநாள் கெஞ்சி துறவிக்கு ஒரு முடங்கல் வரைந்தான். அதிலும் இத்திட்டம் பற்றிய சிறு குறிப்பை அவன் உட்படுத்தத் தவறவில்லை. அத்துடன் துறவு நங்கைக்கும் அவன் எழுதினான்.

'என் திட்டத்துக்கு நீங்கள் அவ்வளவு திடமான எதிர்ப்புடையவர்களாயிருந்தது கண்டே என் நோக்கங்களின் நேர்மையை நான் விரும்பிய அளவில் உங்களிடம் முற்றிலும் வலியுறுத்தி வாதாடவில்லை. ஆனாலும் நான் வெளியிடத் துணிந்த சில சொற்களின் மூலமே அதில் எவ்வளவு ஆழ்ந்த உறுதி எனக்கு இருந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டதாகக் கேள்விப்பட்டால், நான் எல்லையில்லா மகிழ்ச்சியுடையவனாவேன்' என்று அவன் தெரிவித்தான். கடிதத்தில் செருகிய ஒரு தாள் நறுக்கில் ஒரு பாடலும் வரைந்திருந்தான்.

'குன்றாடு மலர்முகத்தை மறந்திட நான் முயன்றாலும் நின்றாடு கின்றதன்றி நெஞ்சில் அகன்றிலதே!'