பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. கிரித்சுபோ

முன்னொரு காலத்தில் ஒரு சக்கரவர்த்தி இருந்தார். யார் அந்தச் சக்கரவர்த்தி எந்தக் காலத்தவர் என்று இப்போது அறியத் தேவையில்லை. அந்தச் சக்கரவர்த்தியின் ஆஸ்தானப் பேரவையிலே ஆடையணியரங்கக் கூடத்தில் இடம் பெற்ற சீமாட்டிகளிலே ஒருத்திதான் இங்கே நம் கதைத் தொடக்கத்துக்கு உரியவள். மற்றச் சீமாட்டிகளைப்பார்க்க. அவள் அவ்வளவு உயர்குடிப்பெருமை உடையவளல்ல. ஆனாலும் மற்ற எந்தச் சீமாட்டிகளுக்கும் கிட்டாத உயர் பதவியை அடையும் பாக்கியம் அவளுக்கு ஏற்பட்டது. தமக்கே அந்தப் பதவி கிடைக்கக் கூடுமென்று முதல் வரிசைச் சீமாட்டிகளெல்லாரும் உள்ளூர மனப்பால் குடித்து வந்தனர். இந்த ஆசைக்கனவுகளைத் தகர்த்துவிட்ட அப் புதுப் பெருமைக் காரியிடம் அவர்கள் மிகவும் வெறுப்பும் அருவருப்பும் கொண்டனர் ஆடையணி அரங்கத்தின் இரண்டாந்தரச் சீமாட்டிகளோ இதுவரை அவளுடனே சரிசமமாகத் தோழமை கொண்டிருந்தவர்கள் இப்போது தம் தலைக்குமேல் அவ்வளவு உயரத்தில் அவள் பறக்கத் தொடங்கியது கண்டு, அவர்களும் அவள் மீது பொருமினார்கள். இக்காரணங்களால், பேரவையில் அவள் பதவி உச்ச உயர்வுடையதாகவே யிருந்தாலும், அவளைச் சுற்றியடித்த பொறாமை, சூழ்ச்சிப் புயல்களும் அதே அளவு வன்கண்மை உடையவையாய் இருந்தன. அவற்றின் ஓய்வொழிவற்ற நச்சரிப்புகளால், அவள் உடல் தளர்ந்தது, உளம் சோர்ந்தது. அவளது வழக்கமான முகமலர்ச்சி அவளிடமிருந்து நிலையாகவே விடைபெற்றுக் கொண்டது. அவள் அரண்மனையில் அதிகமாகத் தங்காமல் அடிக்கடி தன் மனைக்கே சென்று ஒதுங்கி வாழத் தலைப்பட்டாள்.

யார் அவள் மீது சோர்வுற்றாலும், அவளே சோர்ந்து தளர்வுற்றாலும், சக்கரவர்த்திக்கு மட்டும் அவள் மீது ஏற்பட்ட