பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம் - 22

செயலற்றவளாக்கியிருந்தது. தோட்டத்தில் அவள் புறக் கணிப்பின் சின்னங்களை அவ்விலையுதிர் காலத்தின் ஊதைக் காற்றும் மிகைப்படுத்திற்று. நிலவொளி அதிகமாக ஊடுருவ விடாமல் வாதுமை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இவற்றைக் கவனித்தவாறே சிறுமி மாளிகை வாயிலை அடைந்தாள்.

அவளைக் கண்ட மாதரசி அவளுக்கு வரவேற்புமொழி எதுவும் கூற இயலாதநிலையில் சிறிதுநேரம் வாளா இருந்தாள். பின் அவள் வாய்திறந்தாள். 'அந்தோ! நான் இந்த உலகில் எல்லைகடந்த காலம் நீடித்து வாழ்ந்துவிட்டேனே!' இந்த மாளிகைக்கு வரும் வழியை அடைத்துக் கிடக்கும் புதர்க் கூளங்களின் மீது பனியில் நனைந்து கொண்டு உங்களை ஒத்த உயர்பண்புடைய ஒரு தூதர் நடந்துவரும்படியாயிற்றே!' என்று கூறிஅவள் அழுதாள். ஆனால், அம்பறாத்தூணிச் செல்வரின் சிறுமி சாதுரியமாகப் பேசினாள். 'அம்மணி, இங்கேவந்த அரண்மனை மாது ஒருத்தி இங்கே கண்ட காட்சிகளால் மனநைவுற்று உருகியதாகச் சக்கரவர்த்தியிடம் சென்று கூறினாராம்! இப்போது என் மனநிலையும் இதுவே!' என்றாள்.

சிறிதுநேரம் சென்றபின் சிறுமி சக்கரவர்த்தி கூறியனுப்பிய செய்தியை ஒப்பித்தாள், “என்மனம் இருள் சூழ்ந்து கிடக்கிறது, அதன் பயங்கரக் கனவுகளை விட்டு வெளியேற வழிகாணும்படி நான் தட்டித்தடவிப் பார்த்தேன். எவ்வளவோ ஆழ்ந்து ஆலோசனை செய்து பார்த்தும் அத்துயிலொழிக்க வகை காணவில்லை. எனக்கு இங்கே அறிவுரையோ ஆறுதலோ கூறுபவர் யாரும் கிடையாது. தாங்களாவது இரகசியமாக இங்கே வரமாட்டீர்களா? இளவரசன் அவ்வளவு பாழ்பட்ட துயரடைந்த இடத்தில் நாட்கழிப்பதும் நல்லதல்ல, அவனும் உடன்வருக!” சக்கரவர்த்தி இத்துடன் இன்னும் என்னென்னவோ கூறினார். ஆனால் பல பெருமூச்சுகளுடன் அவர்பேசிய அச்சொற்க ளெல்லாம் ஒரே குழப்பமாயிருந்தன. அத்துடன் அவர் தம் துயரை என்னிடமிருந்து மறைக்க எடுத்துக்கொண்ட பெருமுயற்சிகளைக் கண்டதும், முழுதும் கேட்காமலே நான் புறப்பட்டு வந்து விட்டேன். அவர் வரைந்தனுப்பிய கடிதம் இதோ இருக்கிறது' என்று சிறுமி கூறிக் கடிதத்தை நீட்டினாள்.