பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அப்பாத்துரையம் - 22

செல்வனாக வளர்ந்திருந்தான், அவனைக் காணச் சக்கரவர்த்தி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

அது இளவேனில் பருவம்; பேரரசுக்குரிய பட்டத்து இளவரசனைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும் காலம் அணுகி வந்தது. ஆனால், சக்கரவர்த்திக்கு இச்சமயம் உள்ளூர ஒரு நைப்பாசை எழுந்தது. 'மூத்த புதல்வன் உரிமையைப் புறக்கணித்து விட்டு, இந்த அழகிளஞ் செல்வனையே பட்டத்து இளவரசனாக அறிவித்து விட்ட லென்ன' என்று அவர் அடிக்கடி எண்ணமிட்டார். அடக்க முடியாத இந்த ஆர்வத்தூண்டுதலுக்கு அவர் ஓயாது இரையானார். ஆயினும் இது செய்ய அவர் முற்றிலும் துணியக்கூடவில்லை. அத்தகைய தேர்தலை ஆதரிக்கப் பேரவையில் யாரும் முன்வர மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். அத்துடன் தேர்ந்தெடுத்து விட்டாலும், தேர்வின் பின்னும் மக்கள் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என்று அவருக்குத் தோற்றவில்லை. இப்படிப்பட்ட செயலால் குழந்தை இளவரசனுக்குப் புகழைவிட ஆறாத் துயரே மிச்சமாகும் என்பதைச் சக்கரவர்த்தி மதித்துணர்ந்தார். எனவே, உள்ளத்தின் உள்ளாழத்திலிருந்து எழுந்த அந்த ஆர்வத் திட்டத்தை அவர் உள்ளத்திற்குள்ளேயே அடக்கி யமைந்தார்.

அந்த

உலகினிடமிருந்து அவர் உள்ளாசை முற்றிலும் மறைக்கப் பட்டுவிட்டது. ஆனால், இந்த மறைப்பின் மூலமே அவருக்கு ஒரு நற்பெயர் கிடைத்தது. அவர் விரும்பியதையே எதிர்பார்த்த மக்கள், எதிர்பார்த்தபடி நடவாதது கண்டு வியப்புற்றனர், அவரைப்

பாராட்ட முந்தினர். 'பார், சிறுவன் மீது தம் உயிரையே தான் கொட்டி வைத்திருக்கின்றார், நம் சக்கரவர்த்தி! ஆயினும் என்ன? தம் ஆர்வப் பைத்தியத்தைக் கூட அவர் ஓர் அளவில் நிறுத்தி வைத்துவிட்டாரே!' என்று அவர்கள் கலகலப்புடன் கூறினர். அரண்மனைச் சீமாட்டிகள் உள்ளங்களில்கூட இதுவரை இவ்வகையில் நிலவிய அச்சம் பெரிதளவு குறைந்தது. அவர்களும் அமைதியுற்றனர்.

-

இளவரசனின்பாட்டி சீமாட்டியின் தாய் அடைந்த துயரம் என்றும் ஆற முடியாத் துயரமாகவே அமைந்தது. மாண்ட புதல்வியின் ஆவியைத் தேடிச் செல்லும் ஆர்வம் அவளிடம்