பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

31

பெரும் பணி முதல்வனாக, பேரவைப் புகழ் சான்ற உறுப்பினனாக அவன் உயர்வு பெற்றால்கூட, ஒரு சுமுகமான முடிவை இவன் வகையில் என்னால் காணமுடியவில்லை. ஏனென்றால், அப்போதும் நான் முன்னால் குறிப்பிட்ட அரசுரிமைக் கூறுகளை அவன் மீறியாகவேண்டும்' என்று சோதிடன் கூறிமுடித்தான்.

வலங்கைத் துறை செயலாளர் சூழ்ச்சிநய மிக்கவர். கல்வியிலும் அனுபவத்திலும் ஆழ்ந்தவர். சோதிடனுடன் நயமாகப் பேசி அவன் பேச்சை அவர் வேறு திசையில் மாற்றினார். அவன் அறிவின் ஆழந்தேர்ந்து தன் அறிவின் ஆழங்காட்டி அவனை மாறா நண்பனாக்கினார். இறுதியில் இருவரும் தம்மிடையே கவிதைகள், கட்டுரைகள் பரிமாறிக் கொண்டனர். சோதிடன் உள்ளம் இப்போது இன்பத்தின் குளிர் தென்றலில் குளித்தாடிற்று. 'இப்பேரரச எல்லையை விட்டகலும் தறுவாயில் இவ்வளவு அகன்ற அறிவாற்றல் படைத்த ஒருவருடன் கலந்து உரையாடும் மகிழ்ச்சி எனக்குக் கிட்டியுள்ளது.இப்போது விடைகொள்ள நான் வருந்தினாலும், இவ்விடத்திலிருந்து மிக இனிய உணர்ச்சிகளுடனேயே நான் சொல்கிறேன்' என்று அவன் மனம் விட்டுப் பேசினான்.

சிறுவனாகிய ளவரசனும் இச்சமயம் ஓர் இனிய சிறுகவிதை இயற்றி அதைச் சோதிடனுக்குப் பரிசாய் அளித் தான். சோதிடன் அதை அளவிறந்த ஆர்வத்துடன் பாராட்டி அவனுக்குத் தானும் பல நேர்த்தியான பரிசுகள் வழங்கினான். இவற்றைக் கேள்வியுற்ற சக்கரவர்த்தி மீண்டும் கருவூலத்திலிருந்தே சோதிடனுக்குப் பேரரச மதிப்புக்குரிய பரிசுகள் பலவற்றை அனுப்பிப் பெருமைப்படுத்தினார்.

இவையனைத்தும் மிகமிக இரகசியமாகவே நடைபெற்றன. ஆயினும் பட்டத்து இளவரசன் பாட்டனாரான வலங்கை அமைச்சரும் அவர் சார்பினரும் எப்படியோ இவற்றைப் பற்றிக் கேள்வியுற்றுச் சந்தேகமும் சஞ்சலமும் கொண்டனர். ஆனால், சக்கரவர்த்தி அவர்கள் சந்தேகத்தையும் சஞ்சலத்தையும் எளிதில் திறம்பட அகற்றினார். அவர் இப்போது சீன நாட்டுச் சோதிடர்களையே வரவழைத்தார். தாமே கண்ட சில குறிகளால் தம் சிறுவனை உரிமை இளவரசனாக ஏற்பதற்கே இது வரை தாம்