பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

அப்பாத்துரையம் - 22

அதன் அழகைக் கண்டு மயங்குவது போலிருந்தது. அத்தகைய இடத்தைக் கடந்து நானும் செல்ல விரும்பவில்லை. ஆகவே இளைஞன் வண்டியை விட்டு இறங்கியபோது நானும் அங்கேயே இறங்கினேன். மாதரசிக்கு மற்றொரு காதலன் இருந்தான் என்பதை நான் முன்பே ஊகித்திருந்தேன். அவன் சிறிதும் தயக்கமில்லாமல் நேரே உள்ளே சென்றான். முன் வாசலிலுள்ள மூங்கில் தட்டி மீது ஒய்யாரமாக அமர்ந்த வண்ணம். நிலவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.'

‘பொன்னரளிப் பூக்கள் அப்போது தான் முழுதும் மலர்ச்சி யடைந்து கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கின. வாடிவிழுந்து கிடந்த வண்ணச் சருகுகள் காற்றில் அல்லாடிக் கலகலத்தன. அதிசயிக்கத்தக்க அழகிய ஓவியத் திரைக்காட்சி போல யாவும் எங்கள் கண்முன் தோற்றின.

'திடுமென இளைஞன் தன் ஆடையில் செருகி வைத்திருந்த ஒரு குழலை எடுத்து வாசித்தான். பின் குழலை ஒரு புறம் வைத்துவிட்டு,"இனிய தண்ணார் நிழல்" முதலிய பண்ணார்ந்த பழம் பாடல்களைப் பாடினான். விரைவில் வீட்டினுள் நாட்டு யாழ் ஒன்று மீட்டப்பட்டு அப்பாடலுக்கிசைய நயமுடன் யாரோ இனிய இசை யெழுப்பினர். முன்பனிப் பருவத்திற் கேற்றபடி பண்ணின் திறம் அமைந்திருந்தது. அதில் பாடலுக் குரிய அணங்கு தன்வயப்பட்டு உணர்ச்சியுடனும் மென்னயங் களுடனும் ஈடுபட்டிருந்தாள். இதனால் பாடலின் ஓசை பலகணிக் கதவுகளினூடாகவே செவியில் வந்து விழுந்தாலும், அது காலத்துக்குகேற்ற புத்தம் புதிய பாணியிலமைந்து, உள்ளுணர்ச்சிகளை வாய்மையுடன் வெளியிடுவதாயிருந்தது. நிலவின் எழிலார்ந்த இன்னமைதிக்கு அது எல்லாவகையிலும் ஏற்ற தாயமைந்திருந்தது. இளைஞன் உள்ளம் இதனால் கிளர்ச்சியும் எழுச்சியும் கொண்டது. இசையின் ஓசை வெளிவந்த பலகணிக்கு நேராக அவன் இப்போது சென்று நின்றான். செல்லும் சமயம் அவன் தற்பெருமையுடனும் மகிழ்வுடனும் என்னைத் திரும்பி நோக்கினான். “இச்சருகுகளின் மீது என்னைத் தவிர வேறு எவரும் நடந்து சென்றிருக்கமாட்டார்கள். வேறு பலர் காலடியும் இதுவரை அவற்றின் மீது படிந்திருக்க முடியாது” என்றும் அவன் கூறினான்.