பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதலாம் காட்சி

களம் 1.

மாமனார் வீடு

(திரு. ஹார்ட்காசில், திருமதி ஹார்ட் காசில், இருவரும் தங்கள் பழமையான நாட்டுப்புற மனையில் உரையாடிக்

கொண்டிருக்கின்றனர். நேரம்; முற்பகல்.)

திருமதி ஹா: ஆண்டுக்கு ஒரு தடவையாவது லண்டன் பட்டணம் போய் இன்பமாகப் பொழுது போக்காதவர்கள் இந்த வட்டாரத்திலேயே வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.லண்டன் நாகரிக சமூகமும் நாகரிகமும் எப்படியிருக்குமென்று கண்ணாரப் பாராமலேயே நான் என் வாழ்நாளைக் கழிக்க வேண்டி இருக்கிறது.

திரு.ஹா: லண்டன் நாகரிகத்தைப் பார்க்கப் பட்டணம் போக வேண்டுமா? அதன் போலிப் பகட்டுக்களும் பசப்புக்களும் இங்கேதான் குவிந்து கிடக்கின்றனவே. நேரேபோய் வந்து விட்டால் போதும்; ஒரு தலைமுறைக்கு வேண்டிய முகப்பூச்சுக்கள், வண்ணச்சாயங்கள், நறுமயிர் நெய்கள் எல்லாம் வந்து குவிந்துவிடும். நல்ல மனிதருக்கு வேறு தலையிடி வேண்டியதே யில்லை.

திருமதி ஹா: போதும், போதும்! நீங்கள் ஒருவர்தான் இப்படிப் பழமையைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள். இந்த வீட்டைத்தான் பாருங்களேன். மார்ல்பரோக் கோமகள் காலத்திலிருந்தது போலவே இருக்கிறது.பார்ப்பவர்கள் இதைப் பெரிய குடும்பத்து வீடு என்று கூறமாட்டார்கள். ஏதோ பழங்கால வழிப்போக்கர் விடுதி என்றுதான் கூறுவார்கள்.

திரு.ஹா: பழமையை ஏன் பழிக்கிறாய்? பழைய நண்பர்கள், பழைய நூல்கள், பழைய அமுது ஆகிய எவற்றிலும் பழமைதானே