பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

அப்பாத்துரையம் - 23

செல்வி கேட்: தாங்கள் கூறுவது உண்மையே. அதற்குத் தான் நீங்களும் அப்பாவும் மறைந்திருந்து எங்கள் பேச்சைக் கேட்கும்படி கோருகிறேன். அதோ அப்பாவும் வந்து விட்டார். (திரு. ஹார்ட்காசில் வருகிறார்.)

திரு.சா.மார்லோ: வாருங்கள் தோழரே, கேட் கூறும் திட்டந்தான் உண்மை நிலையை உணரச் சரியான வழியாகத் தோன்றுகிறது. நாம் இப்படி திரைக்குப் பின்னால் அமர்ந்து கவனிப்பது நலமெனக் கருதுகிறேன்.

(திரைக்குப்பின் போய் இருவரும் அமருகின்றனர்)

செல்வி கேட்: (தனக்குள்) இதுவரை என் வெற்றிக்காக ஆள் மாறாட்டமும், குரல் நடிப்பும் தேவைப்பட்டன. இப்போது அவர் வெற்றிக்காக இந்த ஏற்பாடு தேவைப்படுகிறது. அதற்காக என் காதலரை இப்படிப் பொறிக்குள் கொண்டு வந்து சிக்க வைத்திருக்கிறேன். டானி மாட்டி வைத்த பொறியை விட என்பொறி ஒன்றும் கெடுதல் செய்யப் போவதில்லை. எல்லாம் அவர் நன்மைக்குத்தான். இதோ அவரும் வந்து விட்டார். நான் எதிர்பார்த்தபடியே என்னிடம் விடைபெற்றுப் போக வருகிறார்.

(மார்லோ வருகிறான்)

மார்லோ: அன்பே, நான் யாரிடம் விடைபெற்றுக் கொண்டு போனாலும் போகாவிட்டாலும், என் ஆருயிரைத் தனிமையில் கண்டு விடைபெற்றுச் செல்லாவிட்டால் என் மனம் ஒரு நிலையில் இராது. எனவே என் உயிரை நாடி ஓடி வந்தேன். விடைகொடு, கண்ணே! இந்த வீட்டில் என்னால் நிகழ்ந்த எதிர்பாராத அமர்க்களத்திற்குப் பின் நான் இனி இருக்க முடியாது. ஆகவே போகிறேன். ஆனால் உண்மையாய்ச் சொல்கிறேன். இம்மாளிகையை விட்டுப் போகும் போது, உன்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கிறதே என்ற ஒன்றுக்குத்தான் நான் மிகவும் வருந்துகிறேன்.

செல்வி கேட்: அன்பரே, தவறுவது மனித இயல்பு. நீங்கள் வேண்டுமென்று தவறு செய்யவில்லை. தவற்றைக் கண்டதும் வருந்துகிறீர்.இன்னும் இரண்டு நாளில் எல்லாம் சரிப்பட்டு விடும். இன்று நீங்கள் காட்டும் வருத்தமே உங்கள் நிலையைச் சரிப்படுத்தித் தவறுகளை எல்லாம் மறக்கடிக்கும். இது உறுதி.