பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மூல ஆசிரியரைப் பற்றி

வங்க நாடு நிலவளமுடையது; கலைவளமுடையது. ஆனால் இலக்கியத் துறையிலே மிக இளமை வாய்ந்தது. அது இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டத் துவங்கி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலமே ஓடி மறைந்திருக்கிறது. ஆனால் இதுவரை வங்கம் வழங்கிய நிலைபேறான இலக்கிய மணிகள் எண்ணற்றவை. வங்க இலக்கியத்தின் தலையூற்றை வளப்படுத்திய பெருமை பங்கிம்சந்திரர், துவிஜேந்திரலால் ராய், கவிதாகூர் ஆகிய மூவரையே சாரும். மூவரும் சிறந்த புலமை மிக்கவர்கள். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு துறையில், சந்திரர் புனைகதை மன்னர்! தாகூர் கவிஞர்! ராய்பாபு நாடகப் பேரறிஞர்!

19-ஆம் நூற்றாண்டில் பிறரால் எள்ளி நகையாடப்பெறும் இழிநிலை ஏந்திய வங்க இலக்கியக் குடிலைத் திருத்தி, சந்திரரும், ராய்பாபுவும் இலக்கிய மாளிகைக்கு உறுதியான அடித்தள மிட்டனர். வங்க இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ராய்பாபுவே என்று அறுதியிட்டுக் கூறலாம்.

அவர் மறுமலர்ச்சித் தூதுவன்! காவிய மன்னன்! நாடக அறிஞன்! சரித ஓவியன்! வங்க இலக்கியம், வங்க மொழி, வங்க மக்கள், அவர்கள் வாழும் வங்காளம் உள்ளளவும் போற்றப்படும் பெரும் புகழ் அவர் பெற்று விட்டார்.