பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

73

நூர்: நான் ஆக்ராவுக்கு வராமலே இருந்திருக்க வேண்டும். வந்ததற்கு இப்போது படுகிறேன்.

தோழி: என்ன நடந்தது அம்மா?

நூர்: தெருவில் ஆரவாரம் கேட்டது. யாரோ இது தான் ஷேர்கான் வீடு என்று கூறியது கேட்டுப் பலகணி வழியே வெளியில் பார்த்தேன். வேட்டையாடையுடன் சலீம் பேரரசர் நின்றார். நான் அவரைப் பார்த்தேன். அவர் உடனே என்னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நின்றுவிட்டார். எல்லோரும் கவனித்தார்கள்; வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது. ஆனால் நான் மனம் குழம்பி அப்படியே நின்றுவிட்டேன்.

தோழி: இதில் தாங்கள் ஏன் கலவரப்பட வேண்டும், அம்மணி? அவர் பேரரசர். தங்கள் கணவர் அவர் நண்பர். மேலும் அவர் உங்களைப் பார்த்தபோது நீங்கள் ஏன் விலகியிருக்கக்கூடாது?

நூர்: (சிறிது ஆழ்ந்து நினைந்து பெருமூச்சுவிட்டு) அது பழங்கதை அம்மா! உன்னிடத்தில் கூறுவதற்கென்ன? முன்பு ஒரு தடவை அவர் இதைவிடத் துணிச்சல் காட்டியிருந்தார். அப்போது, பேரரசர் அக்பர் காலம். எனக்கு மணமாகவில்லை; மணப்பேச்சு நடந்துகொண்டிருந்தது. அச்சமயம் அரண்மனை யில் ஒரு விருந்து நடந்தது. அதன் முடிவில் மன்னவையோர் தங்கள் குடும்பப் பெண்களை முகமூடியுடன் அரசர் முன் ஆடிப்பாட ஏற்பாடு செய்திருந்தனர். நானும் சென்றிருந்தேன்.

தோழி:பார்க்கவா? ஆடல்பாடலில் கலக்கவா?

நூர்:பார்க்கத்தான் விரும்பினேன். ஆனால் தந்தை தடுத்து விட்டார். பின் ஏதோ அவர் கருத்து மாறி முகமூடியுடன் ஆடவே அனுப்பினார். சுழன்று சுழன்று ஆடும் ஆடலிலும், கலந்தும் தனிப்பட்டும் பாடும் பாடலிலும், இளவரசர் சலீம் என்னைத் தனிப்படக் கவனிப்பதை நான் உணர்ந்தேன். இதனால் அடிக்கடி என் ஆடலும் பாடலும் தடைப்பட்டன.

தோழி: உங்கள் மனம் அவரிடம் ஈடுபட்டதா?