90
அப்பாத்துரையம் - 24
மீகாமன் வாசகத்தின் கடைசி ஒலி ‘டாம்' என்று முடியுமுன் 'டாம்' என்ற ஓசை இடியோசை போலக் கேட்டது.
கப்பலின் அடித்தளம் பிளவுண்டது.
ஆனால் கப்பல் தாழவும் இல்லை. முன் செல்லவும் இல்லை. பாறை ஆப்பறைந்தது போல் கப்பலினுள் பதிந்து கொண்டது.
தண்ணீர் இலேசாகக் கப்பலினுள் வந்தது. ஆனால் பாறை கப்பலினுள் புகுந்து பதிந்திராவிட்டால் வேகம் இன்னும் மிகுதியாயிருக்கும்.
நீர் பாதிக் கப்பல் வரை வந்துவிட்டது. ஏவலாளர் உடல்களும் வெடவெடத்தன. ஆனால் மீகாமன் அமைதி பாறையின் அமைதியாயிருந்தது.
கப்பலில் ஒரு படகு இருந்தது. அதை இறக்கும்படி கட்டளையிடப்பட்டது. நீ முந்தி, நான் முந்தி யென அனைவரும் அதில் ஏறினர். கப்பல் உடைவதற்குக் காரணமாயிருந்த தங்க்ரூவில் ஏறத் தயங்கினான். மீகாமன் அவனையும் ஏறும்படி கட்டளையிட்டான்.
ஆனால் மீகாமன் படகில் வர மறுத்தான்.
படகில் பதின்மூன்று பேர் இருந்தனர். இன்னும் ஒருவர் வந்தால் அது கவிழ்ந்துவிடக்கூடும். அதனாலேயே மீகாமன் ஏறவில்லை என்று அவர்கள் எண்ணினர். ஆயினம் அவ் ‘வீரமீகாமனை' விட்டுச் செல்ல அவர்கள் விரும்பவில்லை. அவனை விட்டுச் செல்வதை விட அவனுடன் இறப்பது மேல் என்று கருதினர். ஆகவே அவனை வற்புறுத்தினர். ஆனால் அவன் முடிவாக மறுத்துவிட்டான். 'கப்பலுக்கு நான் பொறுப்பு. அது அமிழ்ந்தபின் நான் வாழமாட்டேன். அதனுடன் என் உயிர் முடியட்டும்' என்றான்.
தங்க்ரூவில்லைத் தான் குற்றம் சாட்டவில்லை என்று கூறி அவர்களை மீகாமன் அனுப்பினான். கப்பலின் கணக்கு வழக்கு ஏடுகளையும் பத்திரங்களையும் படகில் கொண்டு செல்லும்படி ஒப்படைத்தான்.
கண்களில் நீர்ததும்பக் கதறியழுதவண்ணம் டியூராண்டையும் மீகாமன் குளூபினையும் விட்டுப் படகு சென்றது.