பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் - 24

உடல் செல்லத்தக்க நீண்ட புழை கண்டு அதில் இரவு தங்கினான். இவ்விடத்தில் இதுவரை இருந்துவந்த பறவைகள் இரவில் நெடுநேரம்வரை அவனைச் சுற்றி வட்டமிட்டு அவனைத் துரத்தப்பார்த்தன. பின் தம் குடியிருப்பை மனிதனிடம் விட்டுவிட்டு அவை தம் குடியிருப்பை மனிதப் பாறைக்கு மாற்றின.

கடலில் வேலியிறங்கிய சமயம் பாறைகளுள் படிந்தும் அலைகளில் ஒதுங்கியும் கிடந்த கப்பலின் கட்டைகள், கயிறுகள், சங்கிலிகள், நங்கூரக் குண்டுகள் ஆகியவற்றை அவன் சேகரித்தான். இயந்திரச் சட்டத்தில் தன்பளு தாக்காதபடி மெல்ல ஏறிச்சென்று அதிலுள்ள பொருள்களை அகற்றி அதன் பளுவைக் குறைத்தான். அவன் சேர்த்த கட்டைகளே அவனுக்கு விறகாயின. இரும்புத் துண்டுகளே தீக்குச்சிகளாயின. கப்பலில் தொங்கிய கயிறுகளை முறுக்கி வடங்களாக்கினான். கப்பல் சட்டத்தின் நடுப்பாலம் இரும்புக் கம்பியாலானது. அதைப் பிரித்தெடுத்து, அரமாகவும் ஆணிகளாகவும் சிறுகச் சிறுக மாற்றினான். பாறையில் சுழன்றடித்த காற்றை அவன் கொல்லுலைக் குகையில் நுழையாமல் மரத்தட்டிகளால் தடுத்து சிறு புழைகள் வழியாக வரச்செய்து அதன்மூலமே ஊதுலை உண்டு பண்ணினான்.

ஒரு வார வேலைக்குப்பின் இயந்திரத்தை இறக்கும் திட்டம் ஒருவகையில் உருவாயிற்று. எதிரெதிராயிருந்த பாறைகளின் டுக்கில் கட்டைத் துண்டுகளை வைத்து அடைத்து அதில் ஆணிகள் அடித்தான். இவற்றின் உதவியால் இயந்திரச் சட்டத்துக்கு மேலும் கீழும் பல குறுக்கு விட்டங்கள் பூட்டினான். அவற்றில் கப்பிகளிட்டு வடங்களின் மூலம் இயந்திரத்திலும் சட்டத்திலும் மாட்டினான்.எல்லாக் கப்பிகளின் வடங் களையும் ஒரே ஒரு கயிற்றால் இழுக்கும்படி அமைத்ததுடன், தன் பளுவுக்கு மேற்படாத பளுவுடனே இயந்திரம் இயக்கப்படும்படி பல நிலையான கப்பிகளையும் இயங்கு கப்பிகளையும் இடையிட்டு வைத்தான்.

ஒருநாள் காலையில் உணவு இருக்குமிடத்தில் அவன் உணவைத் தேடினான். அதைக் கட்டோடு காணவில்லை. காற்று அதைக் கீழே தள்ளிருந்தது. அதன் சிந்தல் சிதறல்களைப் பறவைகள் கொத்தித் தின்றுவிட்டன. தங்கிடத்தைத் தான் பறித்ததற்கு மாறாக, அவை அவன் உணவைப் பறித்தன.