பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

143

வெற்றியே எல்லையற்ற ஆற்றலுடையவை என்ற புதிய கருத்தமைதி எப்படியோ அவனுக்கு ஏற்பட்டுவிட்டது.

இரண்டாண்டுகளுக்கு பின் ஓலா திரும்பிவந்தான்.

அவன் மாறுபாட்டை எல்லாரும் கவனித்தனர். அவன் புதிய தகுதிகளும் விரைவில் வெளிப்பட்டன. ஆனால் இது காலத்தின் செயல் என்றோ நீண்ட வருத்தத்தின் விளைவு என்றோ நினைத்தனர்; அல்லது நகர வாழ்வு, கலைப்பயிற்சி ஆகியவற்றின் பயன் என்று மட்டுமே அனைவரும் நினைத்தனர். மாறுதல் ஜக்ரிஸ் குடும்பத்தின் தொடர்பிலும் ஏற்படக்கூடும் என்று அவர்கள் எண்ணவில்லை.

ஓலாவின் புதுப் பண்பு, புதுக் கருத்துக்கள், புதுத் தகுதி அவனுக்கு மாவட்ட வாழ்வில் உயர்வு தந்தன. முதியவனான ஜக்ரிஸுடன் அவன் இப்போது இத்துறையிலும் சரிநிகரானான். இது அவன் குடும்பப் போராட் டத்தின் ஒரு புதிய துறை என்றுதான் எல்லாரும் நினைத்தனர். அதற்கேற்ப ஜக்ரிஸ் பொதுக் காரியங்களில் அவனுடன் முட்டியபோதெல்லாம் மும்முரமான தாக்குதலில் ஈடுபட்டான். ஆனால் ஓலா எல்லோரும் எதிர்பார்த்தபடி எதிர்க்கவில்லை. பின் வாங்கினான் அல்லது ஆதரித்தான். இப்போதும் மக்கள் ‘புலிபாயப் பதுங்குகிறது' என்று மட்டுமே கூறினர்- புலி பசுவாயிற்று என்று கருதவில்லை.

ஒரு நாள் ஜக்ரிஸ் தென்மலையூராருடன் நின்று உரையாடிக் கொண்டிருந்தான். ஓலா அவ்வழி வந்தவன், வியக்கத்தக்க முறையில் அமைதியுடன் அவனை அணுகி “நான் தங்களிடம் கல்லா முரடனாக நடந்துகொண்டதைப் பற்றி வருந்துகிறேன். இப்போது கல்வி கற்றுத் திருந்தி விட்டேன். ஆகவே பழைய பகைமையை முற்றிலும் மறந்து விடும்படி வேண்டுகிறேன்" என்றான். ஜக்ரிஸ் இவ் எதிர்பாரா நட்புப் பண்பை ஏற்கவில்லை. அவன் இறுமாந்த மறுமொழியில் ஏளனமும் வசையும் கலந்திருந்தன. ஓலா மேலும் பேச்சுக் கொடுக்கத் துணியாமல் வசைக்கு எதிர்வசை பாடாமல் வாளா சென்றான்.