216) ||_ _
அப்பாத்துரையம் - 24
வரவேற்பு அளிப்பது மரபு. ஆகவே மியூகி மென்மொழிகளால் மறுப்புக் கூறி, அவர்களைப் படகை விட்டு வெளியேறும்படி குறிப்புக் காட்டினாள். அவளுடைய தோழி அஸாகேயும் முன்வந்து, "பெண்கள் தனித்திருக்குமிடத்தில் இப்படி அழையாவிருந்தாய் நுழைந்து, பிதற்றுவது சாமுராய்களாகிய உங்களுக்கு அழகா?” என்று கண்டித்துக் கேட்டாள். அவர்கள் எதற்கும் துணிந்த கயவர்கள். அவள் சொற்களைச் செவியேற்காது அவளை அப்பால் தள்ளிவிட்டு மியூகி அருகே வந்து அவள் கையைப் பற்ற முனைந்தனர்.
பெண்கள் தனித்து இருக்குமிடத்தில் அவர்கள் அனுமதி பெறாமல் எவ்வாறு உள்ளே போவது என்று தயங்கி நின்றான் அஸோஜிரோ. ஆனால் மனித உருவிலே இரு விலங்குகள் புகுந்து ஆதாளி செய்வது கண்டு அவன் உத்தரவு கேளாமலே படகில் புகுந்தான்.
"ஐயன்மீர், பெண்கள் கலவரப்படும்படி நடப்பது நன்மக்களாகிய உங்களுக்குத் தகுமா? அருள்கூர்ந்து அப்பாற் செல்லுங்கள்” என்று அஸோஜிரோ மெல்லக் கண்டித்துப் பார்த்தும் வம்பர்கள் அவன் சொற்களுக்குச் சிறிதுஞ் செவி சாய்க்கவில்லை. அவர்கள் கண்ணில்பட்ட ஒரே பட்டுப்பூச்சி மியூகி- அதையே எட்டிப் பிடிக்க முயன்றனர் இருவரும். மியூகி நடுநடுங்கிக்கொண்டே பின் நகர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் அடுத்த கண்ணிமைப் போதில் அங்கே என்ன நிகழ்ந்ததென்று யாரும் கவனிக்க முடியவில்லை. வம்பர்கள் இருவரும் மியூகியின் காலடியிலே, படகின் தளத்தின் மீது பட்டமரம் போல் சாய்ந்து கிடந்தனர். அஸோஜிரோ தனக்குத் தெரிந்த மற்போர் முறைகளுள் ஒன்றைக் கையாண்டு அந்த 'மரங்களை' அடியற்று வீழச் செய்திருந்தான். அவன் கைத்திறங்கண்ட அவர்கள் இனித் தங்கள் பருப்பு இங்கு வேகாது என்று கண்டு படகிலிருந்து தங்கள் கடையைக்கட்டிக் கொண்டனர்.
மியூகி நன்றியும் அன்பும் கலந்த நோக்குடன் அஸோஜி ரோவை வரவேற்றாள். அவன் தன் பாடல் நறுக்கைப் பின்பற்றி அவளை நோக்கிய போது, அவளும் எதிர்நோக்கி அவனிடம் ஈடுபட்டிருந்தாள். அவள் பாட்டு அத்துடன் நின்றிருந்தது.பாடல் நறுக்கை அஸாகே எடுத்து அவள் கையில் கொடுத்த போது,