பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

(267

தான் அது தன்னைத் தானே உணர முடியும். எனவேதான் ஒரு மனிதனின் புறச் சூழல்கள் எப்போதும் அவன் அகப்பண்புடன் ஒத்தவையாக அமைக்கப்பட்டு விடுகின்றன. ஆயினும் எந்தக் குறிப்பிட்ட சமயத்திலும் புறச்சூழல்கள் மனிதன் அகப் பண்புக்கு முற்றிலும் ஒத்ததாயிருந்துவிடும் என்று கூற முடியாது. பொதுவாக மட்டுமே புறச்சூழல்களின் கூறுகள் ஒவ்வொன்றும் அகப்பண்பின் ஓரோர் உயிர் நிலைக் கூறுடன் ஒத்ததாயிருக்கும். அப்புறக்கூறுகள் மாறாதவையல்ல; ஆனால் மாறுமுன் அவை தற்காலிகமாக அகக்கூறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. வளர்ந்த அக்கூறுகள் மீண்டும் புறக்கூறுகளை மாற்றியமைத்து விடுகின்றன, அல்லது வளர்த்துப் புத்துருவாக்குகின்றன.

வாழ்வில் மனிதன் நிலை அவன் உள்ளார்ந்த ஒழுங் கமைதியைப் பொறுத்தது. அதன் பண்பின் கட்டமைப்புக் கூறுகளாக அவன் உருவாக்கிச் சேர்த்த எண்ணங்களே அவனை அவ்விடத்தில் நிலைபெறச் செய்பவை. அதுபோலவே அந்நிலையில் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலும் அவன் உருவாக்கும் கருத்துக்களின் விளைவே. எனவே எண்ணங்கள் பண்பாகி, பண்பு வாழ்வாகின்றது. வாழ்வு சூழல்களை மாற்றியமைத்து உருவாக்குகின்றது. இதில் எல்லாம் இம்மியும் பிழையாத ஒரு சட்ட அமைதிக்கு உட்பட்டவை. தற்செயல் நிகழ்ச்சி என்று எதுவும் இயற்கையிலும் கிடையாது; மனித வாழ்விலும் கிடையாது. இது சூழலைத் தம் வயப்படுத்துபவர்கள் வகையில் மட்டுந்தான் சரியான உண்மை என்றில்லை. சூழல் தம் கட்டுக்கடங்காதது என்று கருதுபவர்கள் வகையிலும் இவ்வமைதி செயலில் சிறிதும் மாறுபடவில்லை.

மனிதன் இயற்கைப்பண்பு எப்போதும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நாடியே செல்லும் திறமுடையது. அவன் மனிதனாக வாழ்வில் நிலைகொள்வது கூட அறிய வேண்டுவன வற்றை அறிந்து அவ்வழி நின்று வளர்வதற்காகவே. சூழ் நிகழ்ச்சிகள் அவனுக்காக இவ்வறிவைத் தம்முள் அடக்கி வைத்திருக்கும் பெட்டகங்கள். அத்துடன் அவை ஒருபோதும் நிலையாயிருப்ப தில்லை. அவன் மாற்றியமைத்தாலும், அமைக்காவிட்டாலும் அவை மாறவே செய்கின்றன.புதுப்புதுச் சூழ்நிலைகள் அவனிடம் புதுப்புது அறிவை ஏந்தி நிற்கின்றன.