(278
அப்பாத்துரையம் - 24
இத்தண்டனைகள் தண்டனையடைந்தவனைப் பாதிப்பதன்றி, அதைவிடப் பன்மடங்காகத் தண்டித்த சமூகத்தையே பாதிக்கிறது. கொலைஞனுக்குக் கொலைத் தண்டனை, பழிக்குப்பழி, பகைமைக்குப் பகைமை என்ற பழைய உலகநீதியின் கேடு இது. இன்றும் இந்நீதி உலகில் முற்றிலும் அகலவில்லை. உலகில் அழிவுற்ற நாகரிகங்களின் வரலாற்றை ஆராய்ந்தால், அவற்றின் அழிவுக்காரணங்களாகிய பண்புக் கூறுகளுள் இதுவும் ஒரு முக்கியமான கூறாயமைந்திருப்பது காணலாம். இப்பண்புகள் முனைப்பாகவிருக்கும் நாகரிகங்கள் இன்றும் அழிந்துவரும் நாகரிகங்களே என்னலாம்.
நம் உள்ளார்ந்த நற்பண்பின் பயனாகவேதான் இன்னல் அடைகிறோம் என்று ஒரு மனிதன் நம்புவதற்கு முன், அவன் தன் உள்ளமைப்பை நன்காராய்ந்து, அதன் தீய பண்புக் கூறுகளைத் துருவித்தேடி அகற்ற அரும்பாடுபட வேண்டும். தூய்மையற்ற எண்ணங்களின் தூசு, நோயுற்ற கருத்தின் ஒரு நுண்பொடி, கடுகளவேனும் சிறுத்த மனக்கசப்பு ஆகிய எதுவும் இல்லை என்ற உறுதி ஏற்பட்டபின்பே அம்மனப்பான்மை கொள்ளத் தகும். ஆனால் அப்போதும் அவன் சமூகப் பண்பின் உச்ச உயர்வை எண்ணித் தனிமனிதப் பண்புகளில் சிலவற்றைப் புறக்கணிப் பவனேயாக முடியும். ஆயினும் மனமாரத் தெரிந்து பொதுப் பண்புக்காகத் தனிப்பண்பை விட்டுக்கொடுப்பவனை நாம் தன்மறுப்பாளன் என்று போற்றுதல் தக்கதென்பதில் ஐயமில்லை. அவ்வுச்ச உயர் திறமுடையவனை மனிதன் என்பதைவிடத் தெய்வம் என்று கருதுவதே சால்பு. ஏனெனில் அது அத்தனை உயர்வும் அருமையும் உடையது. அந்நிலையை அடைந்து விட்டோம் என்று எவரும் எளிதாகக் கொள்ளுதல்மட்டும் அருமையினும் அருமையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் தகாதவரும் அங்ஙனம் எளிதில் ஆராயாமல் கருத்தில் கொண்டு தருக்க இடமேற்பட்டுவிடும்.
நல்ல எண்ணங்களும் கருத்துக்களும் நன்மையே பயக்கின்றன என்றும்; தீய எண்ணங்களும் கருத்துக்களும் தீமையே தருவன என்றும்; புறஉலக இயற்கையைப் போலவே, அகஉலக இயற்கை அல்லது ஒழுக்கமுறையும் மாறாச்சட்ட அமைதிக்கு உட்பட்டதென்றும் விளக்கமாகக் காட்டிவிட்டோம்.