86
அப்பாத்துரையம் - 25
அவர்களிட்ட பாலகிருஷ்ணன் என்ற பெயரையும் மறந்து விட்டான்.தயானந்தன் என்ற புதுப்பெயருடன் பெற்ற தாயின் அணைப்பில் மீண்டும் புது வாழ்வு புகுந்தான்.
போன பிள்ளை மீண்ட கதை சீதை குடும்பத்தின் பெயரை எங்கும் பரப்பிற்று. பலர் மீண்டுவந்த குழந்தையைக் கையுறை யுடன் காணவந்தனர். அவர்களிடையே ஆளுடன் ஆளாக இராமுவும் கங்குவும் தம் புதுக் குழந்தையுடன் சென்று தம் குழந்தையினும் பன்மடங்கு கண்ணாக வளர்த்த தம் பால கிருஷ்ணனைக் கண்டனர். சீதை யன்புடன் போட்டியிட்டுச் சிறுவனை அவள் மடிமீது வைத்து அணைத்துக்கொண்டாள். தன் மனக்குழப்பத்தை மறைக்கச் சீதையிடம் ‘அம்மா, உன் மூன்றாவது குழந்தை மறைந்து மீண்டது. என் முதற் குழந்தை மறைந்தேவிட்டது. உன்மகிழ்ச்சியால் என்துயரை மறைக்க எண்ணுகிறேன்' என்று கூறிக் கொண்டு பிள்ளை கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தாள்.
அவள் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகிற்று. குழந்தை அருமையுணர்ந்த சீதை அவள் தாயுணர்ச்சியை அறியாதறிந்து அவளுடன் அனுதாபம் கொண்டாள். அவள் குழந்தை யன்பையும் அவள் தாராள நன்கொடையையும் அவள் வாயாரப் போற்றினாள்.
‘நம்’ திருட்டின் முழுப்பயனான இன்பத்தையும் பெற்று விட்டோம். அதற்கான நியாயமான தண்டனையையும் பெற்றுவிட்டோம். ஆயினும் இத்தனை துன்பம் கொடுத்தும் பெறுதற்கெட்டா இன்பம் இரட்டிப்பாகவே நமக்குக் கிடைத்தது. நம் திருட்டைக் கடவுள் மன்னித்து விட்டார். என்பது உறுதி' என்று கங்கு கணவனிடம் கூறினாள்.