பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

159

கணவன் அறிவுத்திறத்திலும் செயலாற்றலிலும் நம்பிக்கை யிழந்துவிட்ட உருக்குவுக்குக்கூட அவன் முக மலர்ச்சி ஒர் எழுச்சியை ஊட்டிற்று. மனக் கிளர்ச்சியுடன் 'என்ன? உங்கள் பழைய வழிகளை விட்டுப் போகும்படி புதிதாக வேலை ஏதேனும் வந்துவிட்டதா? இந்தச் சோம்பல் பிழைப்பைவிட்டு வேலையில் ஈடுபட்டால் நல்வாழ்க்கைக்கு ஒரு விடிவு ஏற்படும்' என்றாள்.

விசு: வேலையும் பிழைப்பையும் இந்தப் பிறப்பில் என்னால் ஆகாதவை. நடைமுறையில் செய்யக்கூடிய வழி ஒன்றையே கூறுகிறேன்.

உருக்குவுக்கு வந்த நம்பிக்கையும் கிளர்ச்சியும் வந்த வழியே மீண்டன. மீண்டும் வழக்கமான உணர்ச்சியற்ற குரலில் 'சரி. உங்கள் திட்டத்தையே பார்ப்போம்,' என்றாள்.

விசு: ஏன் இலட்சுமியை நானே மணந்து கொண்டால் அவள் செல்வத்தை வைத்துக்கொண்டு நாம் எல்லாரும் கவலையின்றி வாழலாமல்லவா?

உருக்கு: இந்தப் பேடித்தனமான வழிதானா உங்களுக்கு அகப்பட்டது? இது என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணம்? ஒரு மனைவியை வைத்துக்கொண்டே வாழ வகையில்லாதவ னுக்கு இரண்டு இருந்து என்ன செய்ய? அதிலும் அவள் வாழ வேண்டிய சிறு குழந்தை உதவாக்கரைக் கிழவனைக் கட்டிவைத்து அவள் வாழ்க்கையை அழிக்க நான் ஒப்பமுடியாது.

விசு: சரி, அப்படியானால் நீயும் உன் பிள்ளைகளும் பட்டினி கிடக்கச் சித்தமாயிருந்து கொள்ளுங்கள் இலட்சுமி வேறுயாரை மணந்து கொண்டாலும் அவள் செல்வம் அவ

ளுடன் போய் விடும்.

உருக்கு: ஏன், நீங்கள் உங்கள் குடும்பத்தைக் காக்க ஏதாவது வேலை செய்வது தானே. நானும் ஏதாவது ஊழிய வேலைகள் செய்தும் பால், மோர் திண்பண்டங்கள் விற்றும் என்னா லானதைச் செய்கிறேன்.

விசு: நீ வேண்டுமானால் உழைக்கலாம். எனக்கு உழைத்துப் பணம் தேடிப் பழக்கமில்லை. நான் அவ்வழியில் கருத்தைச் செலுத்தவும் முடியாது.