தாயகத்தின் அழைப்பு
9
அழல் அவிந்து இதற்குள் கரியும் சாம்பலும் பறந்தன. இருள் மட்டும் கவிந்தது.
மற்ற ஒளிகளும் பல்வேறுநிலையில் அணைந்து வந்தன. ஒன்றுமட்டும் நீடித்தொளி வீசிற்று. அதுதான் மீகாமன் வை வீட்டில் அதன் பேர்த்தி யூஸ்டேஷியா வளர்க்கும் தீ” என்றான் ஒருவன்.
“அந்தப் படுபாவி சூனியக்காரி இப்படிப் பேய்ச் சூனியம் பண்ணுவதால்தான் என்பிள்ளை குற்றுயிராய் நலிகிறது. அவள் பந்தம் கொளுத்துகிற நாளெல்லாம் என் பிள்ளை நோயால் துடிக்கிறது” என்றாள் ஒரு கந்தலாடைப் பெண்.
“நீ கடவுளை மறந்தாலும் மறப்பாய், சூசன்நண்சச்! பேய்ச் சூனியத்தை மறக்கமாட்டாய்" என்றான் ஃவெர்வே. "உன் பிள்ளை வாழ்வை அது பாதித்தால் தெரியும் உனக்கு" என்று அவள் சீறினாள்.
ஃவெர்வே அவள் பேச்சைவிட்டுக் கிழவனை நோக்கி "தாத்தா, அந்த மணப்பெண் தாம்ஸின் அத்தை திருமதி யோப்ரைட்டை நேற்றுக் கண்டேன். அவள் மகன் கிளிம் வருகிறானாம் இங்கே, கிறிஸ்துமசுக்கு. ஆள் நல்ல படிப்பு, நல்ல முறுக்கு. பாரிஸில் வாழ்ந்து வைரக்கடையில் வேலை பார்ப்பவனுக்குக் கேட்பானேன்! இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நம் ஊருக்கு அவன் வரவேற்பு விழாவாகத்தான் இருக்கும்” என்றான்.
"பாரிஸாவது, லண்டானாவது! நம் புதர்க்காட்டுக்கு எதுவும் ஈடல்ல" என்றான் கிழவன் காண்டில்.
அவர்கள் தன்னால் ஆதரிக்கப்பட்ட நங்கையையும் அவள் குடும்பச் செய்திகளையும் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று அறிந்து காவிக்காரன் இதுவரை கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் திருமண நாளில் அவளுக்கு என்ன துயரம் நேர்ந்திருக்கக் கூடும் என்பதை அவனால் அறியக்கூடவில்லை.
அவன் கும்பலை அணுகினான். சூசன்நண்சச் "ஐயோ பேய்” என்றலறினான்.
அவன் உருவங்கண்டு டிமதிகூடச் செங்கொள்ளி வாய்ப்பேய் என்று அஞ்சி ஃவெர்வேயின் பின்சென்று அவன் இடும்பைக் கட்டிக்கொண்டான்.