16
||--
அப்பாத்துரையம் - 25
இவ்விடம் வந்து அவளுடன் ஊடாடி மகிழ்வது வழக்கம். தாம்சினை அவன் காதலித்த நாள்முதல் அவன் வரவு நின்றது. அக்காதலைப்பற்றி அவள் கேள்விப்பட்டாள். ஆனால் அவன் வராவிட்டாலும் அவள் வரத்தவறியதில்லை. இரவு குறிப்பிட்ட நேரத்தில் அவள் அவனை அழைத்துப் பேச விரும்பினால், தீப்பந்தம் எரியவைப்பாள். இன்று நவம்பர் ஐந்தாம் நாள் மற்ற தீப்பந்தங்களுடன் அவளும் வளர்த்த தீ அத்தகைய தீப்பந்தமே.
தாம்சினின் அழகு இளவேனிற் காலத்தின் இளம்பிறை என்றால் யூஸ்டேஷியாவின் அழகு முதுவேனிற் காலத்தின் முழு நிலா என்னலாம். அழகுடன் வண்ணமும் திண்ணமும் அவளிடம் ஒன்றுபட்டன. அவள் சிறிது சதைப்பற்றேறிய உடலுடையவள். கண்கள் கவர்ச்சி மட்டுமன்றி மயக்கமும் பிறரை அடக்கியாளும் ஆற்றலும் துணிவும் உடையவையாயிருந்தன. மைக்கறுப்பு நிறம் வாய்ந்த அவள் கூந்தல் கற்றை கற்றையாய் அடர்த்தியுடன் சுருண்டு நீண்டு புரண்டது. இவ்வுருமைதிக்கேற்ப அவள் பற்றும் பாசமும் உடையவள். ஆனால் அதேசமயம் போட்டியும் பொறாமையும் மிக்கவள்.
மாடத்தில் நெடுநேரம் காத்திருந்தும் பயனில்லாமையால், யூஸ்டேஷியாவின் உள்ளம் கொல்லன் ஊதுலை என்னக் குமுறிற்று. அவள் விரைந்து வீடு சென்றாள். வீட்டின் அருகே யுள்ள திடலின் இருகரைகள் சந்தித்த மூலையில்தான் அன்று அவள் தீப்பந்தம் எரிந்து கொண்டிருந்தது. அவன் எதிரே ஒரு சிறு வற்றாத நீர்க்குட்டை இருந்தது. தீப்பந்தத்தின் அருகே ஒரு சிறுபையன் இருந்து பந்தத்தில் அடிக்கடி கட்டைத் துண்டுகளை இட்டுக்கொண்டிருந்தான். அவன் வேண்டாவெறுப்புடன்தான் வேலை செய்தான் என்று தெரிந்தது. அவன் முகத்தில் சோர்வு தட்டியது. அவன் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டு சலிப்புடன் இருந்தான். ஆயினும் அவன் பொறுமையுடன் எதையோ கவனித்துக் கொண்டிருந்தான். தவளை நீரில் துள்ளுவது போல ஓசை கேட்டால் உடனே தன்னிடம் வரவேண்டுமென்று யூஸ்டேஷியா அவனுக்குக் கட்டளை யிட்டிருந்தாள்.இவ்வேலைக்குப் பரிசாக அவனுக்கு ஒரு தேய்ந்த காசும் தருவதாகச் சொல்லி ஆசைகாட்டியிருந்தாள். பாழாய்ப் போன தவளை விழாதா, காசைப் பெற்றுப் போகமாட்டோமா என்றே அவன் காத்துக் காத்து இருந்தான்.