தாயகத்தின் அழைப்பு
27
அத்துடன் மற்றொரு சமயம் அவள் உற்றுக்கேட்ட உரையாட லொன்று அவள் உள்ளப் போக்கை இன்னும் கிளிமின் பக்கம் தள்ளியது. வில்டீவையும் தாம்சினையும் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். தாம்சின் பெருந்துயரைப்பற்றி வருணித்த ஒருவன் இறுதியில் “ஆனால் இத்தனை துயரும் இனி விரைவில் மாறிவிடலாம். உண்மையில் வில்டீவ் இப்போது அவளை மணக்கும்படி கோரினால்கூட அவள் ஏற்றுக் கொள்வாள் என்று கூறமுடியாது.ஏனெனில் காற்றுத் திசைமாறிவிட்டது” என்றான்.
இப்பேச்சு யூஸ்டேஷியா உள்ளத்தில் வில்டீவ் மதிப்பைப் பல படி இறக்கி, கிளிம்மைப் பலப்படி ஏற்றிற்று. அத்துடன் புதிதாக வரும் இவ்வொளிமணியைத் தான் பெறாமல் தாம்சின் தட்டிக்கொண்டு போய்விடப்போகிறாளோ என்ற பொறாமையும் ஏற்பட்டது. உண்மையில் அவனைச் சந்திக்கக் கூட முடியாத தன்னைவிட, அவனுடன் ஒரு வீட்டிலேயே ஓயாது இருக்கும் தாம்ஸினின் வாய்ப்பு மிகுதி என்றும் அவள் புழுங்கினாள்.
மறுநாள் யூஸ்டேஷியா வழக்கம்போல மாலை உலாவும் போது புளும்ஸ்எண்ட்பக்கம் சென்றாள். திருமதி யோப்ரைட் இல்லத்தைச் சுற்றிச் சிறிது நேரம் ஊடாடியபின் கருக்கிருட்டில் அவள் தன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள் திருமதி யோப்ரைட்டின் இல்லத்திலிருந்த முழு அமைதியிலிருந்து கிளிம் வந்து விடவில்லை என்றும், ஆனால் வரவிருக்கும் சமயத்தையே அவ்வமைதி குறிக்கக்கூடும் என்றும் அவள் ஊகித்தாள். ஆனால் அந்த வேளைதான் அவன் வந்துகொண்டிருந்தான் என்பதையோ, அவள் திரும்பிச்செல்லும் வழியில்தான் அவன் வரக்கூடும் என்பதையோ அவள் எண்ணவேயில்லை. ஆகவே, பலர் கூடிப் பேசிக்கொண்டுவரும் அரவமும் பல தலைகளும் தெரியத் தொடங்கவே அவள் பாதையிலிருந்து விலகிப் புதர்ப்பரப்பின் இருளில் மறைந்துகொள்ள முயன்றாள். இதில் அவள் முழுதும் வெற்றியடைய முடியவில்லை. ஆகவே, அவள் எதிர்பாராத ஒரு வெற்றி கிட்டியது.
போகின்றவர்களிடையே தனியாக, முதன்மையாக இருபெண்டிரும் ஒரு ஆடவரும் சென்றனர். தற்செயலாக அவர்கள் யூஸ்டேஷியா இருந்த பக்கம் பார்த்துக் கொண்டு வந்தனர். ஆகவே, இருளிலும் அவளை அவர்கள் பார்த்திருக்க