52
அப்பாத்துரையம் - 25
அதற்குள் கிளிம் அவ்வழி வந்தான். யாரோ கிழவி இறந்துவிட்டது கண்டு அருகில் சென்றான். தன் தாய் என்று அறிந்து கதறினான், அழுதான், புலம்பினான். கும்பல் கூடிற்று. அனைவரும் அவளை அருகிலிருந்த குடிசைக்கு எடுத்துச் சென்றனர். காலில் இருந்த காயம் புதர்க்காட்டின் நச்சு அட்டையால் நேர்ந்ததெனக் கொண்டனர். மருந்திடப்பட்டது. மருத்துவர் வந்தனர். கிழவி உயிர் இப்பால் இல்லை என்று கண்டு அனைவரும் ஓய்ந்தனர்.
யூஸ்டேஷியா நெடுநேரம் காத்திருந்தாள். மீட்டும் வந்த வில்டீவுடன் கணவனைத் தொடர்ந்தாள். நிலைமையறிந்து மீட்டும் மௌனம் சாதித்தாள்.
இச்சமயம் யூஸ்டேஷியாவிடம் அவள் பாட்டன், வில்டீவைப்பற்றிய ஒரு புதுமைச் செய்தியை வெளியிட்டான். அமெரிக்காவிலுள்ள வில்டீவ் உறவினர் இறந்துவிட்டதால் திடீரென்று எதிர்பாராத வகையில் அவனுக்கு நூறாரம்பொன் மதிப்புள்ள திரண்ட செல்வம் கிட்டியுள்ளது என்பதே அச்செய்தி. கிழவன் தன் பேர்த்தி இந்த வில்டீவை மறுக்காமல் மணந்திருந்தால் எவ்வளவு சம்பத்துடையவளாயிருந்திருப்பாள் என்று மனக் கசப்புடன் குறிக்காதிருக்க முடியவில்லை. ஆயினும் இதைத் தன்னிடம் கூறாமலே தன்னிடம் நாடிய வில்டீவின் பக்கம் யூஸ்டேஷியா மிகவும் பரிவும் பற்றும் கொண்டாள்.
தாயின் இறுதிச் சொற்கள் குழந்தைமூலம் கிளிம் செவிக்கெட்டின. உண்மையில் தாயிடம் உயிரையே வைத்திருந்த தனயன் அதை எண்ணிஎண்ணி நோய்வாய்ப்பட்டான். அது தேறியும் அடிக்கடி மனம் தடுமாறினான். அப்போதும் பொய்மை, வெட்கம், காதல் தடுமாற்றம் ஆகிய கூளிப் பேய்களால் அலைக்கப்பட்ட அவன் மனைவி அவனிடம் உண்மை கூறவில்லை. தாயின் இறுதியான நிலையை விவரமாய் அறிய அவன் டிக்கரி நாடினான். அவள் அன்புள்ளத்துடனேதான் வந்தாள் என்று கேட்டு அவன் மனைவி மீது ஐயங்கொண்டான். குழந்தையை விசாரித்தறிந்து சூசன் வீட்டில் சென்று அதை வினவினான். குழந்தை யூஸ்டேஷியா வீட்டினுள் வில்டீவ் சென்றதும், திருமதி யோப்ரைட் தட்டியதும், யூஸ்டேஷியா