ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
137
உன்
வீண்மீன்களுக்கிடையே திகழும் முழுநிலாவையும் அரசுரிமைக் குடிக்குரிய இளவரசர் சூழ்தர, இறவாப் புகழ்வாய்ந்த மாண்புமிக்கமாறன் உள்ளிட்ட போர்ப்புகழ்க் கோசர் துணைதர, ஐம்பெருங் குழுவின் மதிப்பும், குடிமன்னர் குழாத்தின் மதிப்பும் பெற்று வாழ்கிறாய்.
"ஒளிமிக்க பூண்களணிந்த உன் பணிப்பெண்கள் பொற் காலத்தில் ஏந்திய நறுமணமிக்க மதுவை நாள் தோறும் பருகி அப்பெருமையுடன் முழுநிறைவாணாள் பெற்று வாழ்வாயாக!"
படைவீரர்களிடம் அவன் காட்டிய அன்பு, படைவீட்டில் புண்பட்டவரிடம் அவன் கொண்ட கரிசனை ஆகியவை நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடையில் விரித்துரைக்கப்படுகின்றன.6
அது வருமாறு:-
"நள்ளிரவில் குளிர் நடுக்குகிற வாடைக் காற்று வீசுகிறது. ஆயினும் மன்னன் பந்தம் ஏந்திய ஒருசில பணி மக்களுடன் தன் கூடாரத்தைவிட்டுப் புறப்படுகிறான். சேணமிட்டுச் சிறுமணி களால் ஒப்பனை செய்யப்பட்ட சிறப்பு மிக்க போர்க்குதிரை ஒன்று அவன்பின்னே செல்கிறது.”
"முத்துக்கோவைகள் தூக்கிய வெண்குடை ஒன்று மழைத் தூறலிலிருந்து காக்கும் முறையில் அரசன் தலைக்கு மேலாகப் பிடிக்கப்படுகிறது. இடது கையால் நீண்டு தொங்கும் தன் ஆடையைப் பிடித்துக்கொண்டு, அரசரிமைச் சின்னமான வாளைக் கையிலேந்திய கட்டுடல் வாய்ந்த ஓர் இளைஞன் தோள்மீது வலக்கை இட்டவண்ணம் அவன் செல்கிறான்.”
படைத்தலைவர்களில் ஒருவன் வேப்பந்தார் 'சூட்டிய வேலைத் தாங்கியபடி முன்சென்று, முன்னாள் போரில் புண்பட்ட வீரர் ஒவ்வொருவரையும் தனித்தனி சுட்டிக்காட்ட அவன் நலமுசாவினான்.'
இரண்டாம் நெடுஞ்செழியனுக்குப்பின் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அரசனானான். 48 புலவர் முன்னிலையில் திருவள்ளுவரின் மாளாப் புகழ் நூலான திருக்குறள் அரங்கேற்றப் பட்ட அவைக் களத்தின் அரசன் என்ற முறையில் தமிழ் இலக்கிய மாணவர் எல்லாருமே இவ்வரசன் பெயரை அறிவர்.