8. வேளிரும் குடிமன்னரும்
பல நூற்றாண்டுகளாக முடியுடைய வேந்தர்களாய்த் தமிழகத்தில் சேர சோழ பாண்டியர் என்ற அரசர்கள் மட்டுமே ருந்துவந்தனர். இதன் பயனாகவே அவர்கள் ஒரு தொகைப்பட மூவேந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.ஆயினும் தமிழகத்திலே மிகப் பரந்த பகுதிகளை ஆண்ட பல்வேறு வேளிரும் குடிமன்னரும் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் மூவரசருள் யாரேனும் ஒருவருக்குக் குடியுரிமைப்பட்டவராகவே விளங்கினர். அவ்வப்போது அவர்களில் சிலர் தங்கள் மேலாட்சியைத் தூக்கி எறிந்துவிட்டுத் தனியுரிமையில் மன்னராக முயன்றதுண்டு. ஆனால் அவர்கள் மிக விரைவில் கீழடக்கப்பட்டார்கள்.
குடி மன்னருள் முதலாவதாகக் கூறக் கூடியவன் திரையன். அவன் திரையர் அதாவது கடலரசர் குடிசார்ந்தவன். இம் மரபையே சோழரும் தங்கள் குடிமரபாகக் கொண்டிருந்தனர். புகழ் பெற்ற கரிகாலசோழன் சிறுவனாயிருந்த காலத்தில் காஞ்சித் திரையன் சோழ அரசையே கைப்பற்றி அதன்மீது நீண்டநாள் ஆட்சி செய்தான். திரையனைப் புகழ்ந்து பாடப்பெற்ற பெரும்பாணாற்றுப்படையின் மூலம் இவ்வரசன் பல்வேல் திரையன் என்ற பட்டத்தையும் தொண்டைமான் என்ற பட்டத்தையும் தாங்கியிருந்தானென்றும் பெரும்புகழ் வீரனென்றும் அறிகிறோம்!
திரையன் உடனடியாகத் தன் ஆட்சிப் பீடத்தைச் சோழர் களின் பண்டைத்தலைநகரான உறையூருக்கு மாற்றிக் கொண்டி ருந்தால், அவன் சோழ அரசுரிமையில் தொடர்ந்து நீடித்துத் தன் மரபினருக்கே அதை விட்டுச்சென்றிருக்க முடியும். ஆனால் அவன் காஞ்சியிலேயே தங்கியிருந்தான். ஆகவே கரிகாலன் தன் முன்னோர்களின் அரசிருக்கையைப் பெறுவதில் தட்ங்கல் மிகுதி இல்லாது போயிற்று.