ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
201
கிட்டத் தட்ட எல்லா நகர்களும், ஊர்களும் பகைவர் களிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் பாதுகாப்பாக அரண் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஊரும் முள்மரங்களின் செறிந்த வேலியால் காக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு நகரத்தைச் சுற்றிலம் ஒரு மதிலும் அகழியும், அகழியைச் சுற்றிலும் மிகுந்த அகலமுடைய முள்மரக்காட்டு வளையமும் இருந்தன. மதுரை. கரூர், காஞ்சி ஆகிய பெரு நகரங்களின் கோட்டைகளின் ஞாயில்களில் முற்றுகை யிடுபவர்கள்மீது அம்புகள் வீசவும், கற்கள் எறியவும்வல்ல பொறிகள் இருந்தன.
மதிலருகே வருவோரைப் பற்றி இழுத்துக் கொல்லத் தக்க தூண்டில் முன்போன்ற பொறிகளும், இரும்பு விரல்களால் பற்றிக் கிழிக்கும் பொறிகளும் இருந்தன. தவிர, மதிலேறிவர முயல்பவர் கள்மீது கொதிக்கும் நெய்யையும், உருக்கிய ஈயத்தையும் கொட்டவல்ல கொதி உலைகள் பேணப்பட்டன. அவர்களைக் குத்தித் தள்ளுவதற் குரிய நீண்ட ஈட்டிகளும், வேல் கம்புகளும் இருந்தன. 4கோட்டையின் படைக்கலச்சாலையில் உடைவாள்கள், வாள்கள், வில் அம்புத்தூணி நிரைகள், கேடயங்கள், மார்புக் கவசங்கள், தேர்கள், குதிரைச் சேணங்கள், யானைப் படாங்கள் முதலியன சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
கோட்டை முற்றுகைவகையில் தமிழர் பின்பற்றிய முறைப் படி, முதலில் கோட்டைசூழ்ந்த காட்டில் ஒரு பெரும் பிளவு செய்து வழி உண்டுபண்ணப்படும். அதன்பின் அகழி தூர்த்துப் படைகள் மதிலை அணூக இடம் உண்டுபண்ணப்படும். இறுதியில் ஏணிகள் மூலம் மதில் ஏறி உட்செல்லவோ அல்லது அரண் தகர்க்கும்படி பயிற்சிதரப்பட்ட யானைகள் மூலம் வாயில்களை முறிக்கவோ முயற்சிகள் செய்யப்படும்.
போர் அணி வகுத்து நிறுத்தப்பட்டபோது, யானைகள் முன்னணியிலும், அவற்றின்பின் தேர்களும், குதிரை வீரரும், இறுதியிலேயே காலாட்படையினரும் நின்றனர். பொதுமுறைக் காலாள்வீரர் இடதுகையில் மாட்டுத் தோலால் செய்யப்பட்ட பெரிய கேடயங்களும், வலது கையில் ஈட்டி அல்லது போர்க் கோடரிகளும் தாங்கினர். வில்லவர் இடதுகையில் நீண்ட வில்லும், தோளில் தொங்கலாக அம்புத்தூணியும் தாங்கினர்.