(224
3.
அப்பாத்துரையம் 26
தெளிவான கோட்பாடுகளையோ சின்னத்தையோ திருக்குறளில் அறவே காண முடியாது. சங்க இலக்கியங்களிலும் தொல்காப்பியத்திலும் கூட அவற்றைப் பிற்கால நூல்களில் காணும் முறையில், காணும் அளவில், காண்டலரிது.
தமிழர் பண்டைச் சமய வாழ்வு இன்றைய பல சமயங்களின் உருவாக மூலக்கருமுதலைத் தன்னிடமாகக் கொண்ட வாழ்வேயாகும். அதில் எல்லாச் சமய மூலமும் காணலாம் ஆனால் அது எச்சமயத்துக்கும் உரித்தன்று.
நாமறிந்தவரை இன்றும் தமிழர் அறிந்த எந்த மொழியிலும் இது போன்ற ஒரு நூல் எழுந்ததில்லை என்பதை உறுதியாகக் கூறலாம். உலகின் பல மொழிகளையும் இலக்கியங்களையும் ஆய்ந்துணர்ந்த உலக அறிஞர் எத்தனையோ பேர் திருக்குறளின் மறவாப்புகழை இறவாப் புகழாக ஏத்தியுள்ளனர். சமஸ்கிருத வாணர்கூட இந்நூலுக்கு இணை நூலாகச் சமஸ்கிருதத்தில் எதையும் எடுத்தியம்பக் காணோம். ஜெர்மன் பேரறிஞரான ஆல்ஃவிரட் ஷ்வைட்ஸர் இந்தியாவின் சமயச் சிந்தனை (The religious thought of India by alfred schweitzer) என்ற நூலில் இந்தியாவின் பேரருட் பெரியார் சிந்தனைகளுக்கெல்லாம் மூலமுதலான சிந்தனைக் கருமூலம் திருவள்ளுவர் திருக்குறளே என்றும், மேலே உலகின் அருட்பெரியார் சிந்தனைகள் அனைத்துக்கும் அதுமேம்பட்ட புதுவிளக்கம் என்றும் கட்டற்ற முறையில் கட்டுரைத்துள்ளார்.